
பெரும்பாலான பாஜக எம்.பி.க்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, மூத்த மத்திய அமைச்சர் ஒருவர், டெல்லியில் கூறியதாவது:-
தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தவறிய பாஜக எம்.பி.க்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய எம்.பி.க்கள், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களைவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெற மாட்டார்கள்.அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாத எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
பாஜக எம்.பி.க்களுக்கு உதவுவதற்காக, அனைத்து அமைச்சகங்களும் தயாராக இருந்தபோதிலும், அந்த வாய்ப்புகளை கட்சி எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், 70 சதவீத எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
அண்மையில் பாஜக எம்.பி.க்கள் தங்களது தொகுதிகளில் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு உதவும் "பீம்' செயலியை பிரபலப்படுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, எம்.பி.க்கள் தங்களது தொகுதிகலில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தேசிய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.பாஜக எம்.பி.க்கள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவியபோதிலும், பிரதமர் மோடி மீதான நம்பிக்கை குறையவில்லை. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிக இளைஞர்களுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பளிக்கும் எனத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்