வலை வீசிய சின்னம்மா..! நூலிழையில் தப்பிய எடப்பாடியார்..! அப்பலோவில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Jul 21, 2021, 10:33 AM IST
Highlights

அதிமுகவில் உள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்து தன்னால் செல்ல முடியும் என்று சசிசகலா ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இதனை எடுத்துக் காட்டும் வகையிலேயே அப்பலோவில் எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ள சசிகலா திட்டமிட்டதாக கூறுகிறார்கள்.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் வைத்து அரசியல் களத்தை அதிர வைக்க சசிகலா போட்ட திட்டம் எடப்பாடியாரின் சாதுர்ய நடவடிக்கையால் தோல்வியில் முடிந்துள்ளது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த இரண்டு நாட்களாக அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சில உடல் நலக் கோளாறுகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மதுசூதனன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்த நிலையில் சென்னையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்பலோ சென்று மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதற்காக மருத்துவமனை வளாகத்திற்குள் எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில் திடீரென ஊடகவியலாளர்கள் இருந்த பகுதி பரபரப்பானது. அப்போது ஜெயலலிதாவின் கார் அப்பலோ வளாகத்தை அடைய அதில் அதிமுக கொடி வேறு கட்டப்பட்டிருந்தால் உள்ளே யார் என்று செய்தியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க, சசிகலா அங்கு இருந்தார். மருத்துவமனைக்கு உள்ளே எடப்பாடி பழனிசாமி இருக்க வெளியே சசிகலா வந்திருந்தார். இதனால் மருத்துவமனை வளாகம் மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பரபரப்பானது. அனைத்து செய்தி சேனல்களும் இந்த நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தன.

அப்பலோ வளாகத்திற்குள் சசிகலா சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை அடுத்து சுதாகரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி எவ்வித சலனமும் இல்லாமல் வழக்கமாக வரும் பாதை வழியாக வந்து எவ்வித அவசரமும் இன்றி காரில் ஏறி புறப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் சசிகலா கார் அங்கு வந்து நின்றது. ஒரு சில நிமிடம் முன்னே சசிகலா வந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரிட்டிருக்கும். எடப்பாடி பழனிசாமியும் கண்டிப்பாக சசிகலாவை தவிர்த்து இருக்க முடியாது. இதைத்தான் சசிகலா எதிர்பார்த்ததாக கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அங்கு இருப்பதை தெரிந்து கொண்டே சசிகலா வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதிமுகவில் உள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்து தன்னால் செல்ல முடியும் என்று சசிசகலா ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இதனை எடுத்துக் காட்டும் வகையிலேயே அப்பலோவில் எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ள சசிகலா திட்டமிட்டதாக கூறுகிறார்கள். எடப்பாடியை அங்கு சந்தித்து இருந்தால் நிச்சயம் அவரால் தன்னை வணங்காமல் இருந்திருக்க முடியாது, உடனடியாக அவரது தோள்களில் கையை போட்டு அரவணைக்க வேண்டும் என்பது தான் சசிகலாவின் இலக்கு என்கிறார்கள். இப்படியான ஒரு காட்சி நடந்திருந்தால் நிச்சயம் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா மீது ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கணக்கு போட்டு இருக்கிறார்கள்.

இதே போல் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருடன் சென்று இணைந்து கொண்டவர் மதுசூதனன். மேலும் சசிகலா குறித்து மிகவும் தரக்குறைவாகவும் அவர் விமர்சித்து வந்தார். அப்படி இருந்தும் கூட, சசிகலா உடல் நலிவுற்று இருக்கும் மதுசூதனனை சந்திக்க அப்பலோ வந்திருந்தார். இதுவும் கூட சென்டிமென்ட் டைப் பாலிடிக்ஸ் தான் என்கிறார்கள். அதாவது தன்னை முதுகில் குத்தினாலும் கூட அவர்களுடனும் இணக்கமாக செல்ல விரும்புவதாக சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு காட்ட முயற்சித்தே அப்பலோ சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!