
நம்ம கூட வெளாடுறதே சசிகலாவுக்கு வேலையா போச்சு. மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்குதே அந்தம்மா!- என்று எடப்பாடியார் அண்ட்கோ எக்கச்சக்கமாக டென்ஷனாகும் வகையில் சசியின் திருவிளையாடல்கள் துவங்கிவிட்டன. இதில் எதிர்ப்போ ஆதரவோ என எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பன்னீர் பம்மியிருப்பதும், சசிகலாவை இ.பி.எஸ். அண்ட்கோ வேற லெவலில் வசை பாடுவதும் ஆல்ரெடி ஆஃபாயில் ஆகிக் கிடக்கும் அ.தி.மு.க.வை ஃபுல்பாயில் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
மேட்டர் இன்னா மாமே!?
‘அரசியலில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறேன்’ என்று கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஸீன் பண்ணிவிட்டு, அதன் பின் ‘தொண்டர்கள் அழைப்பதால் வருகிறே’ என்று மெகா ஸீன் செய்தார் சசிகலா. என்னவெல்லாமோ செய்தும் அவரால் அ.தி.மு.க.வினுள் எட்டு எடுத்து வைக்க முடியவில்லை. அதனால் முடிந்தளவுக்கு அக்கட்சிக்கு ஏழரையை இழுத்துவிடுவோம் என்று சில திட்டங்களை போட்டு செயல்படுத்தினார். ஆனால் அதில் பெரிய வெற்றி ஒன்றுமே இல்லை.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மட்டுமில்லாது நகர்ப்புற ஊராட்சி தேர்தலிலும் செம்ம அடி வாங்கியுள்ளது அ.தி.மு.க. இதனால் செம்ம தெம்புடன் மீண்டும் தன் குடைச்சலை துவக்கியுள்ளார். அக்கட்சியில் உள்ள தன் ஆதரவாளர்களை அழைத்துப் பேச துவங்கியுள்ளார். முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் தலைமையில் திருத்தணி, பொன்னேரி தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் செயலர் சந்தனம் உள்ளிட்ட பலர் சசிகலாவை நேற்று சென்னையில் சந்தித்து பேசினர். அப்போது ‘சின்னம்மா நீங்க வந்தால்தான் கட்சி கரைசேரும். சீக்கிரமா வாங்க’ என்று அ.தி.மு.க.வை கையிலெடுக்க அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு சசி அவர்களிடம் ‘பொறுமையாக இருங்க. விரைவில் நல்லது நடக்கும்.’ என்று சொல்லியுள்ளார்.
மேற்படி சந்திப்பைக் கேள்விப்பட்டு எடப்பாடியார் எக்கச்சக்கமாக கொதித்துவிட்டார். ‘அந்தம்மாள சந்திச்ச அத்தனை பேரையும் கட்சிய விட்டு தூக்கு’ என்று சவுண்டு விட்டுள்ளார். அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரே இந்த துள்ளு துள்ளும்போது ஒருங்கிணைப்பாளர் என்னா டென்ஷன் ஆகணும்!? என்று பார்த்தால் பன்னீர்செல்வமோ பொங்காத பசும்பாலாக அப்படியே அமைதியாக இருக்கிறார்.
இந்நிலையில், பன்னீரின் சொந்த மண்ணான தேனி மாவட்டத்தில் சசிகலாவை அ.தி.மு.க.வுக்குள் வரவேற்று இப்போதே போஸ்டர்கள் வலம் வர துவங்கியுள்ளன சமூக ஊடகங்களில். அதில் ஜெ., சசிகலா, பன்னீர் ஆகியோரின் போட்டோக்கள் பெரியதாகவும், எடப்பாடியாரின் போட்டோவோ எக்குத்தப்பான அளவுக்கு சின்னதாகவும் போடப்பட்டுள்ளன. இதுவும் இ.பி.எஸ்.ஸை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், சசிகலாவிடம் போனில் பேசும், அல்லது அவரால் அழைக்கப்பட்டு போனில் பேசும் தொண்டர்கள் ‘சின்னம்மா வறுமையில கஷ்டப்படுறேன். குடும்பத்த காப்பாத்த வழியில்ல. ஏதாச்சும் உதவி பண்ணுங்கம்மா’ என்று நிதி உதவி கேட்கிறார்களாம். அதற்கு ‘கட்சியை கரை சேர்க்க விரைவில் வருவேன்’ என்று சம்பந்தமே இல்லாமல் பதில் வருகிறதாம்.
இதுவும் அ.தி.மு.க.வில் அனலாக பேசப்படுகிறது. இதற்கு கமெண்ட் அடிக்கும் எடப்பாடியார் அண்ட்கோ ”அந்தம்மாவுக்கு எந்த காலத்துலேய்யா கொடுத்து பழக்கம் இருந்துச்சு! எடுத்தும், பிடுங்கியும், மிரட்டியும்தானே பழக்கம். அதை நம்பி மறுபடியும் போனீங்கன்னா அதோகதிதான்.” என்று டரியல் கமெண்ட்டை அடிக்கின்றனராம்.
ஹாட்டுதான்!