
பூந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியில் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுகசெயலாளர் என்.சுரேஷ் ராஜன் அந்த
பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திமுக 21 மாநகராட்சிகளிலும் அமோக வெற்றி பெற்றது. மேலும் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் பாதிக்கு மேல் இடங்களை கைப்பற்றி, திமுக கூட்டணி மகத்தான வெற்றியை அள்ளியது.
இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதனிடையே மேயர், துணைமேயர், தலைவர், துணைதலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு செய்திருந்தது.
இந்நிலையில் கூட்டணி கட்சிக்கு பங்கீட்டு கொடுத்த பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக தாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய செயல் திமுக உட்பட கூட்டணி கட்சியினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி, அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார்.
மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை 'ராஜினாமா' செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியில் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மத்திய மாவட்டம் , பூந்தமல்லி நகரச்செயலாளர் எம்.ரவிக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவில் போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுகசெயலாளர் என்.சுரேஷ் ராஜனை , அப்பொறுப்பிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆர் .மகேஷ் என்பவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கட்சி நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.