நெருங்கும் கொடநாடு கிளைமேக்ஸ்… நிறைவேறுகிறதா சசிகலாவின் சபதம்..?

By Thiraviaraj RMFirst Published Dec 27, 2021, 10:14 AM IST
Highlights

கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 24-4-2017 அன்று கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.

இதற்கிடையில் கொடநாடு வழக்கில் கூடுதலாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்களின் மரணம் அடுத்தடுத்து நடந்ததால், கொடநாடு சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் புதிதாக கிடைக்கும் தகவல்களை கொண்டு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தெரிந்த தகவல்களை கூறுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ‘‘கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அடித்தட்டு மக்களுக்குக்கூட இந்த விவகாரத்தில் பலத்த சந்தேகங்கள் கிளம்பியிருக்கிறது. வெறும் பணம், நகைக்காக நடந்த கொலை, கொள்ளை கிடையாது. அதன் பிறகு நடத்த விபத்து மரணங்கள் மேலும் சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. ஆட்சி மாறிய பிறகு காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும் கொடநாடு எஸ்டேட்டில்தான் தங்குவார். முதலமைச்சரின் சிறப்பு முகாமாகவே மாறியிருக்கும் கொடநாடு! அமைச்சர்கள் பற்றி முழு விவகாரங்களும் கொட நாட்டில்தான் இருந்தது. எனவே, கொடநாட்டில் என்னவெல்லாம் இருந்தது என்பது பற்றி சசிகலா, இளவரசி, அவர்களுடன் இருக்கும் விவேக்கிற்குதான் தெரியும். அப்போதுதான் மாயமான பொருட்கள் என்ன என்பது பற்றி தெரியவரும். எனவே, விரைவில் சசிகலா, இளவரசிக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க இருக்கிறோம். அதன் பிறகு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியாரிடமும் விசாரணைப் பிடி இறுகும்’’ என்றனர்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக சசிகலா தரப்பில் சிலரிடம் பேசியபோது, ‘‘சின்னம்மா (சசிகலா) எடப்பாடியை ஆட்சியில் அமர வைத்துவிட்டுச் சென்றவுடன் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் ஃபல்கள் கொடநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2016 தேர்தலின் போது, சில அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தது உளவுத்துறை முலமாக ஜெயலலிதாவுக்கு தெரியவந்தது. அதனை உறுதிப்படுத்திய ஜெயலிலதா, அவர்களை கொடநாட்டிற்கு அழைத்து விசாரணை நடத்தியதோடு, சில ஆவணங்களையும் கைப்பற்றினார். அதன் பிறகு தேர்தலில், வேறு தொகுதிகளில் (அதாவது தி.மு.க.வின் ‘மலை’களோடு) போட்டியிட வைத்தார்.

தமிழக போலீசார் சரியான கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் சிக்குவார்கள். அதன் பிறகுதான் ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த சபதம் நிறைவேறும்’’ என்றனர்.

கொடநாடு விவகாரத்தில் சேலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் விரைவில் சிக்கலாம்! ‘விபத்தில்’ இறந்தவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் சில தகவல்கள் கிடைத்திருப்பதால், ‘க்ரைம்’ படத்தையே மிஞ்சுமளவிற்கு கொடநாடு விவகாரம் சென்று கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி இறுதியில் ‘விசாரணை’ முடிந்து, நடவக்கை இருக்கும் என்கிறார்கள்!

click me!