DMK : வருங்கால துணை முதல்வரே வருக... எல்லையை மீறும் உபிக்கள்.. திமுக அட்ராசிட்டிஸ்

By Raghupati RFirst Published Dec 27, 2021, 9:09 AM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளாரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் துணை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திமுக உபிக்கள் போஸ்டர் மற்றும் ப்ளெக்ஸ் பேனர்களை அடித்து தெறிக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் பரம்பரை பரம்பரையாக கலைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பழக்கமான குடும்பத்தினராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கிச் செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்படுகிறார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வர வேண்டும் என்றும், அவரது திறமையை ஒரு தொகுதியில் மட்டும் சுருக்கி விடக்கூடாது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரும் , அவருக்கு உள்ள திறமைகளும் பயன்பட வேண்டும் என்பதால் அவரை அமைச்சராக வேண்டும் என முதல் குரல் எழுப்பினார்.

அடுத்ததாக அமைச்சர் சிவசங்கர்,  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , மூன்று முரை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தன்னால் கூட மக்கள் பணி செய்ய முடியவில்லை என்றும், சேப்பாக்கம் தொகுதியைக் உதயநிதி ஸ்டாலின் தரம் உயர்த்துவார் என்றும், ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமென குரல் எழுப்பினார்.

இப்படியே சென்றுகொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ஒருபடி மேலே சென்று, ‘’உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஆகையால் அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பரிந்துரை கடிதம் எழுதினார். இப்படி நாளுக்கு நாள் திமுகவினரின் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்க, நேற்று கோவை வந்த உதயநிதிக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தினர் செந்தில் பாலாஜி & கோவினர். 

கோவை மாவட்டம் முழுக்கவே வருங்கால துணை முதல்வரே வருக, அமைச்சரே வருக, விடியலே வருக என உதயநிதியை புகழ்ந்து போஸ்டர்களை ஒட்டி மாஸ் காட்டினர். கோவை மாவட்டத்தில் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பேசியுள்ளனர். 

ஆனால், எனக்கு அந்த பொறுப்புகளின் மீது எந்த வித ஆசையும் இல்லை. அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் நான். கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. 

தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள்’ என்று பேசினார்.திமுக உபிக்கள் துணை முதல்வரே,அமைச்சரே என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ள நிலையில், இந்த பொறுப்புகளில் எனக்கு எந்தவித ஆசையும் இல்லை என்று தடாலடியாக பேசியிருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

click me!