
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் ஆகியோரின் பொறுப்பற்ற பேச்சுகளுக்கு பதில் தராமல் தவிர்த்துவிடுங்கள் என்று உடன்பிறப்புகளுக்கு திமுக தலைமை மெசேஜ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
10 ஆண்டுகள் கழித்து அரியணையில் அமர்ந்த திமுகவை, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவை விட ஒரு படி மேலே விமர்சித்து வரும் கட்சிகள் பாஜகவும், நாம் தமிழர் கட்சியும். 50 ஆண்டுகாலம் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று இரு தரப்பும் தொடர்ந்து பேசி வருகிறது.
தற்போது ஆட்சி கட்டில் ஏறி 6 மாதங்கள் எட்டிவிட்ட நிலையில் பாஜக, நாதக கட்சிகள் திமுக விமர்சனம் வேறு பாதையில் பயணித்து இருப்பதாக தெரிகிறது. அதிலும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், அதன் முக்கிய தலைவர்கள் என அனைவரும் திமுகவையும், அதன் தலைமையையும் கடுமையான சொற்களினால் வசைபாடி வருகின்றனர்.
குறிப்பாக பொது கூட்டம் ஒன்றில் தமது காலில் மாட்டியிருந்த செருப்பை கழட்டி சீமான் பேசி இருப்பது உச்சக்கட்ட அநாகரிகம் என்று அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் பேச்சை பொறுக்க முடியாமல் திமுகவினர் மேடையில் அடிக்க பாய விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள் அரசியல் களத்தில் உச்சக்கட்ட அநாகரிகம் என்ற கருத்து அரசியல் பார்வையாளர்கள் இடையே எழுந்துள்ளது. கருத்துக்கு கருத்து தான் பதிலடியே தவிர காலில் இருக்கும் செருப்பு அல்ல, அரசியல் மேடைகளில் நாகரிகம் என்பது அனைத்து கட்சியினரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
இது நாம் தமிழருக்கு மட்டுமல்ல, அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும் என்று கருத்துகளை முன் வைக்கின்றனர். ஒரு கட்சியின் தலைமை பண்பில் இருக்கும் சீமான் போன்றவர்கள் இப்படி பேசுவது அழகல்ல என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
திமுக, நாம் தமிழர் இடையே தற்போது எழுந்துள்ள கருத்து மோதல்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகரும் சூழல்கள் காணப்படுகின்றன. திமுக உடன்பிறப்புகள் சீமானும், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை உற்று நோக்கி பதிலடி தர களத்தில் இறங்கி உள்ளனர். வெகு விரைவில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால், திமுக தலைமையிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக வேறு சில முக்கிய விஷயங்கள் தொண்டர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கின்றன என்று தகவல்கள் கசிந்துள்ளன. இது பற்றி திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக ஏதாவது அரசியல் காய் நகர்த்தல்கலுக்கு அச்சாரம் போட வேண்டும் என்று அதிமுகவைவிட மிக தீவிரமாக பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் இருக்கின்றன. இது தலைமைக்கும் நன்கு தெரியும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதிமுக கருத்துகள், விமர்சனங்கள், அதிலும் குறிப்பாக பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களின் விமர்சனங்கள், எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றுக்கும் பதிலடி கூறுங்கள், மற்ற அனைத்தையும் தவிர்த்து விடுங்கள் என்று கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. தொண்டர்களுக்கும் அந்த மெசேஜ் பாஸ் செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறுகின்றனர்.
ஒரு கருத்தை அல்லது ஒரு விவகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற வித்தை திமுகவுக்கு தெரியாததது அல்ல. கடந்த காலங்களில் அதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன. நாம் தமிழர் விவகாரத்தில், அரசியல் களத்தில் இன்னமும் ஒரிஜனல் திமுகவை சீமான் தம்பிகள் பார்க்கவில்லை. தற்போது அதற்கு சற்று இன்டர்வெல் விடப்பட்டு இருக்கிறது… அவ்வளவுதான்..!
அடுத்து வரக்கூடிய நாட்களில் நாம் தமிழர் கட்சி தலைமை, அதன் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!!