ஒரு வன்னியர் முதல்வராக முடியல.. வன்னியர்கள் ஏன் என் பின்னால் வரமாட்றீங்க.? அப்செட்டில் டாக்டர் ராமதாஸ்.!

By Asianet TamilFirst Published Dec 27, 2021, 8:41 AM IST
Highlights

மற்ற சமுதாயத்தினர் எல்லாம் அன்புமணி முதல்வராகி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

பாமகவைத் தொடங்கி 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஒட்டுமொத்த வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதங்கத்துடன் பேசினார்.

கொரோனா காரணமாக பொதுக்கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போது பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் பாமக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி எனப் பலர் பங்கேற்ற இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். “கடந்த இரு ஆண்டுகளாக தொண்டர்களை என்னால் சந்திக்க முடியாமல் இருந்தது. இதனால், நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். தற்போது எனக்கு கொரோனாவே வந்தாலும் பரவாயில்லை. இனி, தொண்டர்களை ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்.

இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்களில்ஒருவர் கூட வன்னியர்கள் கிடையாது. ஏன் இந்த நிலை? பாமகவைத் தொடங்கி 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஒட்டுமொத்த வன்னியர் மக்கள் என் பின்னால் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால், நாம் ஒன்று சேரக் கூடாது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். வன்னியர் மக்களிடையே போதிய விழிப்புணர்வு கிடையாது. அதனால்தான் வன்னியர் சமுதாய மக்கள் மாறி, மாறி வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதால்தான் பெரும்பான்மையான சமூகமாக நாம் இருந்தும்கூட நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. பல கட்சிகளிலும் பிரிந்து கிடக்கும் வன்னியர்கள் ஒரு முறையாவது பாமகவுக்கு வாக்களித்தால்தான், நம்முடைய கட்சியின் பலம் மற்றவர்களுக்குத் தெரிய வரும்.

மற்ற சமுதாயத்தினர் எல்லாம் அன்புமணி முதல்வராகி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட அநியாயமான தீர்ப்பு. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட நம் இளைஞர்கள் வாக்குரிமை பெறும்போது, பாமகவுக்கு வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் தலையிலேயே எரிகிற கொல்லி கட்டையை தேய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும்” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். 

click me!