ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.. ஆதாரம் இருக்கு.. அந்தர் பல்டி அடித்த திமுக அமைச்சர்

By Raghupati RFirst Published Dec 27, 2021, 7:43 AM IST
Highlights

ஈஷா யோகா கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரிய வருகிறது என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மண்டலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக மக்களுடனான கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை கே என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ‘சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வனத்துறை வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். குரங்கு,மயில் காட்டெருமை மற்றும் முதலை போன்ற விலங்குகளால் விவசாயிகளுக்கு பல வகையில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு மாத காலத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும். 

ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஜைக்கா பிராஜாக்ட் இன்னும் தயார் ஆகவில்லை. இதற்காக 950 கோடி ரூபாய் கேட்டு உள்ளோம். கிடைக்கும் என்று நம்புகிறோம். ஈஷா யோகா கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரிய வருகிறது. சர்வே குழு மற்றும் அதிகாதிகள் கொண்ட குழு மீண்டும் ஈஷா யோகா இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். 

அதே போல், காருண்யா பல்கலைக்கழகமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது, கண்டிப்பாக முறைப்படி அதனையும் ஆய்வு செய்வோம். தமிழக நிலப்பரப்பில் 23.98% மட்டும் தான் வனப்பகுதியாக உள்ளது, இதனை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கிரீன் மிஷன் பிரைவேட்டிங் கம்பெனி என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஒரு வருடத்திற்கு 2.65 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று முதல்வரே அறிவித்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

click me!