சசிகலா வருகை..! அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு..! என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?

By Selva KathirFirst Published Jan 20, 2021, 12:29 PM IST
Highlights

வரும் 27ந் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியே வர உள்ள நிலையில் 22ந் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன்னுடைய சேம்பருக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் இருந்துத தற்போதே அழைப்பு சென்றுள்ளது.

வரும் 27ந் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியே வர உள்ள நிலையில் 22ந் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன்னுடைய சேம்பருக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் இருந்துத தற்போதே அழைப்பு சென்றுள்ளது.

சுமார் 36 வருடங்கள் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலா. அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தாலும் அந்த பதவிக்கான அதிகாரம் சசிகலாவிடமே இருந்தது. கட்சி, ஆட்சி என இரண்டிலுமே சசிகலாவின் அதிகாரம் கோலோச்சி இருந்தது. அதிமுகவில் மாநில அளவிலான நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை ஏன் நகரச் செயலாளர்கள் வரை சசிகலா விரும்புபவர்களே இருக்க முடிந்தது. ஜெயலலிதா என்ன தான் கட்சிக்கு புதியவர்களை அழைத்து வந்தாலும் சசிகலாவிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே அவர்களால் கட்சியில் இருக்க முடியும்.

அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 1991 முதல் அவரை மறைந்த 2016 வரை அதிமுகவை ஆட்டுவித்தவர் சசிகலா தான். அந்த வகையில் அவருக்கு தற்போதும் கட்சியின் அனைத்தும் அத்துப்படி. அதிமுகவின் தற்போதைய தலைமை கழக நிர்வாகிகள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை 90 சதவீதம் பேர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களே. அமைச்சர்களாக இருப்பவர்களும் சசிகலாவின் அனுகிரகத்தால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் தான். எனவே தான் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் கட்சியை உடைக்க முயன்ற சமயத்தில் வெகு சில எம்எல்ஏக்கள், ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே அவருடன் சென்றனர். மற்றவர்கள் சசிகலாவுடன் இருந்தனர்.

இப்படியான சூழலில் சசிகலா அமைத்துக் கொடுத்த ஆட்சியை கடந்த 4 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி பாதுகாத்து நிறைவு செய்ய உள்ளார். இதே நேரத்தில் சசிகலாவும் விடுதலை ஆக உள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் சத்தியம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. எனவே சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அரசியல்ரீதியாக சசிகலாவின் செயல்பாடு வெகு வேகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதிமுகவில் இதுநாள் வரை அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் இருந்தவர்கள் இனியும் அப்படியே தொடர்வார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது. காரணம் சசிகலா விசுவாசம் மற்றும் எடப்பாடியின் மீதான நம்பிக்கை இன்மை எனலாம்.

இதுநாள் வரை ஆட்சி எடப்பாடி  வசம் இருந்தது. ஆனால் தேர்தலில் வென்றால் தான் அதிகாரம் எடப்பாடியிடம் தொடரும். அதே சமயம் சசிகலா 36 வருடங்கள் ஜெயலலிதாவுடன் இருந்தவர். கலைஞருக்கு எதிராக ஜெயலலிதாவை வழிநடத்தியவர். அதிமுகவின் வீழ்ச்சி, வளர்ச்சியை முன்னெடுத்தவர். எனவே நிர்வாகிகள் சிலர் அதிலும் எடப்பாடியால் பலன் அடையாத நிர்வாகிகள் இயல்பாகவே சசிகலா பக்கம் தங்கள் பார்வையை திருப்ப வாய்ப்புள்ளது. இதே போல் அமைச்சர்கள் சிலரும் எடப்பாடி மீது துவக்கம் முதலே அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் சசிகலாவிடம் சரண் அடையலாம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும் சசிகலாவை நாடிச் செல்லலாம்.

இப்படி அதிமுகவில் இருந்து ஒரு தரப்பு சசிகலாவிடம் சென்றால் அதனை சமாளிப்பது எப்படி என்று வரும் 22ந் தேதி ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அத்தோடு சசிகலாவை சமாளிக்க டெல்லியில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகள் தொடர்பாகவும் எடப்பாடி அமைச்சர்களிடம் எடுத்துரைப்பார் என்கிறார்கள். மேலும் சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் போன்ற காரணங்களினால் அவரால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையும், இடைத்தேர்தல்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட தன்னை நம்பும் படியும் எடப்பாடி அமைச்சர்களிடம் பேசுவார் என்கிறார்கள்.

அத்தோடு சசிகலாவோடு தொடர்புடைய சிலரை தற்போதே பொறுப்புகளில் இருந்து கட்சியிலும் இருந்தும் நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபற்றியும் அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசிப்பார் என்கிறார்கள். இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களையும் எடப்பாடி சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

click me!