சசிகலாவுக்கு எதிராக எடப்பாடியின் அதிரடி சரவெடி..! டெல்லியில் நடந்தது என்ன..?

By Selva KathirFirst Published Jan 20, 2021, 12:18 PM IST
Highlights

தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே அதிமுகவில் இனி இடம் இல்லை என்று வெளிப்படையாக பேசியிருப்பதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான ஒரு முடிவை டெல்லியில் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே அதிமுகவில் இனி இடம் இல்லை என்று வெளிப்படையாக பேசியிருப்பதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமான ஒரு முடிவை டெல்லியில் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சராக்கிவிட்டு சென்றார். அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளில் அதிமுக அமைச்சர்கள் பலர் சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் ஒரு முறை கூட சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியது இல்லை. ஏன் சசிகலா என்கிற பெயரை கூட எடப்பாடி பழனிசாமி எங்கும் கூறியது இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் சின்னம்மா என்று குறிப்பிட்டு டிடிவி தினகரனை விமர்சித்திருந்தார். மற்றபடி இந்த 4 வருடங்களில் சசிகலாவிற்கு எதிராக எந்த செயலிலும் எடப்பாடி வெளிப்படையாக ஈடுபட்டதில்லை.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா வரும் 27ந் தேதி வெளியே வர உள்ளார். அவர் வந்த பிறகு அவருடன் இணைந்து அதிமுக செயல்பட வேண்டும் என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். சசிகலா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் கடந்த நான்கு ஆண்டுகளில் மென்மையான போக்கையே கடை பிடித்து வந்தார். இதனால் சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவருடன் எடப்பாடி பழனிசாமி உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. அத்தோடு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள சசிகலாவையும் அதிமுக சேர்த்துக் கொள்ளலாம் என்று டெல்லியில் உள்ள சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு யோசனை தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு முதல் நாள் இரவு அமித் ஷாவுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மிக முக்கியமாக சசிகலா விடுதலை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. சசிகலா நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த காலகட்டத்தில் அதிமுகவை திறம்பட தாங்கள் வழிநடத்தியிருப்பதாகவும் அவர் வெளியே வருவதால் கட்சியில் சிறிய சலசலப்பு கூட ஏற்படாது என்றும் அமித் ஷாவிடம் எடப்பாடியார் எடுத்துரைத்ததாக கூறுகிறார்கள். மேலும் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த சசிகலாவை சேர்த்துக் கொள்வது அதிமுகவிற்கு தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பேச்சுகள் நடைபெற்றுள்ளன.

இதே போல் அமித் ஷாவும் கூட சசிகலா விஷயத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவிற்கு எதற்காக அதிமுக மூலம் மறுபடியும் ஒரு அரசியல் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் தான் அமித் ஷா எடப்பாடியிடம் பேசியதாக சொல்கிறார்கள். இதே போன்று பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் கூட பாஜக – பாமக – தேமுதிகவுடனான அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்றதை போல் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அதிமுக கூட்டணி வெல்லும் என்று எடப்பாடியார் எடுத்துரைத்தாக சொல்கிறார்கள்.

அமித்ஷா மற்றும் பிரதமருடனான சந்திப்பின் போது சசிகலா தொடர்பாக பெரிதாக அவர்கள் இருவருமே எடப்பாடியிடம் எதுவும் கூறவில்லை என்கிறார்கள். இதனால் தான் செய்தியாளர் சந்திப்பின் போது சசிகலாவிற்கு அதிமுகவில் மறுபடியும் 100 சதவீதம் இடமில்லை என்று எடப்பாடியார் கறார் காட்டியுள்ளார். இது போதாது என்று அதிமுகவில் தற்போது சசிகலா உறுப்பினர் கூட இல்லை என்று எடப்பாடி கூறியிருப்பது பலரது புருவங்களையும் உயர வைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அல்ல, செய்தியாளர் சந்திப்பின் போதும் கூட எடப்பாடியார் சசிகலா பெயரை கூட குறிப்பிடவில்லை. அவர் என்றே குறிப்பிட்டு சசிகலா குறித்து பேசியுள்ளார்.

அத்தோடு சசிகலா வெளியே வரும் 27ந் தேதி அன்று ஜெயலலிதா நினைவிடத்திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் சசிகலா விடுதலையில் மட்டுமே ஊடகங்கள் கவனம் செலுத்த முடியாத நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு நிகழ்ச்சியில் பேசும் போது சசிகலாவிற்கு எதிராக சில விஷயங்களை பேசி அவர் சிறையில் இருந்து வெளியே வரும் போது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை குறைக்கவும் திட்டம் தயாராகி வருகிறதாம்.

click me!