ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா சுற்றுப்பயணம்.. ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வழியனுப்பினர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 10:01 AM IST
Highlights

அதற்காக அவர் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட்டார், நாளை தஞ்சாவூரில் நடைபெறும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் வி.கே சசிகலா தனது சென்னை இல்லத்திலிருந்து தொண்டர்களை சந்திப்பதற்காக தஞ்சாவூர் புறப்பட்டார். ஒரு வார கால அரசியல் பயணமாக வி.கே சசிகலா தனது இல்லத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு சுற்றுப்பயணம் புறப்பட்டார். முன்னதாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து, பூசணிக்காய் உடைத்து வழியனுப்பி வைத்தனர். அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்துடனும், அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள தொண்டர்களை சந்திக்கவும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கவும் ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்துக்கு சசிகலா திட்டமிட்டுள்ளார். 

அதற்காக அவர் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட்டார், நாளை தஞ்சாவூரில் நடைபெறும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து 28 ஆம் தேதி, மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்கம் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.29 ஆம் தேதி இராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கும் அவர் 30 ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்ற பின்னர் ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் அன்றைய தினமே தஞ்சாவூர் திரும்பவும் அவர் திட்டமிட்டுள்ளார். 1ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் திருநெல்வேலி உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வரும் நிலையில், சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!