சசிகலா விரைவில் விடுதலை..! பின்னணியில் பாஜகவின் மாஸ்டர் பிளான்... அதிமுக மேலிடம் அப்செட்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2020, 11:34 AM IST
Highlights

சசிகலா விடுதலையை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பின்பு வரை தள்ளிப்போட வேண்டும் என்பது தான் தற்போதைய அதிமுக மேலிடத்தின் விருப்பமாக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் அவர் விடுதலையாவத ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

சசிகலா விடுதலையை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பின்பு வரை தள்ளிப்போட வேண்டும் என்பது தான் தற்போதைய அதிமுக மேலிடத்தின் விருப்பமாக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் அவர் விடுதலையாவத ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விதிகளின் படி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விடுதலையாக வேண்டும். ஆனால் நன்னடத்தையை காரணம் காட்டி அவரை சுமார் 4 மாதங்கள் முன்னரே விடுதலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கர்நாடக மாநில சிறைத்துறையும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக சொல்கிறார்கள். எதுவும் அதிகாரப்பூர்வமாக தற்போது வரை உறுதியாகவில்லை. ஆனால் அதற்குள் பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி, சசிகலா ஆகஸ்டில் சிறையில் இருந்து விடுதலை என்று பகிரங்கமாக ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு மிகவும் நெருக்கமானவர். ரயில்வேத்துறையில் உயர் அதிகாரியாக இருந்த ஆச்சாரி, பின்னர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானார். ஆ.ராசா இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்த போதும் அவருடைய இலாக்காவில் பணியாற்றியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கிலும் ஆச்சாரி பெயர் அடிபட்டது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் ஆச்சாரி.

சுப்ரமணியசுவாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஆச்சாரி, சசிகலா வெளியே வர உள்ளது பற்றி கூறிய கருத்துகள் தான் தற்போது ஹாட் டாபிக். இதனை கர்நாடக சிறைத்துறை மறைத்தாலும் கூட அது தான் உண்மை என்கிறார்கள். நன்னடத்தை, சிறையில் கன்னடம் கற்றது உள்ளிட்ட காரணங்களால் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை முடிவு செய்துவிட்டதாகவே கூறுகிறார்கள். இதன் பின்னணியில் டிடிவி தினகரன் சில காய் நகர்த்தல்களையும் செய்துள்ளதாகவும் அதற்கு பலனாகவே 4 மாதங்கள் முன்னதாகவே சசிகலா விடுவிக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள்.

அரசியல் ரீதியில் தமிழகத்தில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்த முடியாத பாஜக, சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவில் ஒரு குழப்பம் ஏற்படும் என்று கருதுகிறது. இந்த குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி அதிமுகவை மறுபடியும் முடக்கிவைத்துவிட்டால் அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது என்றும் பாஜக நினைக்கிறது. இதனால் தேர்தலில் பாஜக – திமுக இடையே மட்டுமே நேரடிப்போட்டி நிலவும் என்றும் அதனை பயன்படுத்தி தமிழகத்தில் காலுன்ற பாஜக திட்டம் போட்டுள்ளதாகவும், இதனால் தான் சசிகலாவை விடுவிக்க பாஜகவும் திரைமறைவில் உதவுவதாக சொல்கிறார்கள்.

இதே போல் தினகரனும் கூட தன்னுடைய அரசியல் வாழ்வில் மீண்டும் ஒரு எழுச்சி வர வேண்டும் என்றால் அது சின்னம்மா வந்த பிறகே சாத்தியம் என்று நம்புகிறார். அதனால் அவரும் சசிகலாவை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டுவர அனைத்துவித முயற்சிகளிலும் ஈடுபட்டு அதில் சிலவற்றை முடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே சசிகலாவை மேலும்சில நாட்கள் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் அதிமுக மேலிடத்தின் விருப்பம். அதிலும் சிறையில் இருந்து  ஷாப்பிங் சென்ற விஷயமே வெளியே வரக்காரணமே சசிகலா தேர்தல் சமயத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்கு தான்.

எனவே அந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பி சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதை தடுக்க அதிமுக மேலிடம் முயன்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் பாஜக சசிகலாவிற்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பது பாஜக மேலிடத்தை அப்செட்டாக்கியுள்ளது என்கிறார்கள்.

click me!