சசிகலா ஆதரவு..! எடப்பாடியாரை டென்சன் ஆக்கிய பிரேமலதா..! அதிமுக – தேமுதிக கூட்டணியில் லடாய்..!

By Selva KathirFirst Published Feb 4, 2021, 11:10 AM IST
Highlights

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்கிற ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கொடுத்த பேட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது கூட ரசிக்கவில்லை என்கிறார்கள்.

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்கிற ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கொடுத்த பேட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது கூட ரசிக்கவில்லை என்கிறார்கள்.

சசிகலா அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் முன்னரே அதனை முடித்து வைத்துவிட்டு தான் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். சிறையில் இருந்து வெளியே வந்து பிறகு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆன பிறகும் கூட சொல்லிக் கொள்ளும்படி அதிமுகவினர் யாரும் சசிகலாவை கண்டுகொள்ளவில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை சசிகலா சென்னை வரும் போது பெரிய அளவில் கூட்டம் கூடாமல் தடுத்துவிட்டால் போதும், என்கிற மனநிலையில தான் தற்போது எடப்பாடியார் உள்ளார்.

எனவே தான் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடித்து வரும் சிறு சிறு நிர்வாகிகளை தயவு தாட்சன்யம் பார்க்காமல் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநில அதிமுக செயலாளரான யுவராஜ் யாரும் எதிர்பார்க்காத வகையில் சசிகலா தங்கியுள்ள ரிசார்ட்டிற்கு சென்று வந்தார். இதனை அடுத்து அவரையும் கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இப்படி சசிகலாவிற்கு ஆதரவாக கட்சியில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து காலி செய்வது உறுதி என்கிற செய்தியை தனது நடவடிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி தெரியப்படுத்தி வருகிறார்.

ஆனால் திடீரென அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சசிகலாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதிலும் ஊழலுக்கு எதிராக பேசி வரும் பிரேமலதா விஜயகாந்த், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சசிகலாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பிரேமலதா கூறியது எடப்பாடியை டென்சன் ஆக்கியுள்ளதாக சொல்கிறார்கள். தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அக்கட்சியை கூட்டணிப்பேச்சுவார்த்தைக்கு தற்போது வரை அதிமுக அழைக்கவில்லை.

அதே சமயம் பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு பிறகு தேமுதிகவுடன் பேச அதிமுக முடிவெடுத்துள்ளது. ஆனால் பாமகவிற்கு அதிமுக முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமலதாவால் ஏற்க முடியவில்லை என்கிறாரகள். இதனால் தான் அவர் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். மேலும் பாமகவிற்கு இந்த முறை அதிக தொகுதிகளை அதிமுக கொடுத்தால் கூட்டணியில் நீடிப்பதையே மறுபரிசீலனை செய்ய பிரேமலதா முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

அத்தோடு பாமக இருக்கும் கூட்டணியில் தேமுதிக இந்த முறை இருக்காது என்றும் பிரேமலதா பேசி வருகிறார். திமுக தரப்பில் இருந்தும் தேமுதிகவிற்கு முறையான அழைப்பு ஏதும் வரவில்லை. இதனால் கடந்த முறையை போல இந்த முறையும் 3வது அணி அல்லது தனித்து போட்டி என்று பிரேமலதா முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில் சசிகலாவிற்கு ஆதரவாக பேசினால் அவர் மூலமாக அரசியலில் எதுவும் சாதித்துக் கொள்ள முடியுமா என்று பிரேமலதா கணக்கு போடுவதாக கூறுகிறார்கள். மேலும் தினகரன் கட்சியான அமமுக மீதும் பிரேமலதா மற்றும் எல்.கேக.சுதீசுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளதாம்.

இதனை எல்லாம் மனதில் வைத்து தான் பிரேமலதா சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வருகிறாராம். ஆனால் இப்படி பேசுவதால் தனக்கு நெருக்கடி கொடுக்க முடியும்எ ன்று தேமுதிக நினைப்பதால் எரிச்சல் அடைந்துள்ள எடப்பாடியார் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தற்போது வரை ஒப்புதல் கொடுக்கவில்லையாம்.

click me!