விவசாயத்தை மேம்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை பிடன் நிர்வாகம் ஆதரிக்கிறது.. அமெரிக்க அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 11:09 AM IST
Highlights

பொதுவாக இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் பிராந்தியத்தில் தனியார்த்துறை முதலீட்டை அதிகரிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். 

அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்கள் வளரும் ஜனநாயகத்தின்  அடையாளமாகும் எனவும், அதை நாங்கள் அங்கீகரிக்கும் எனவும் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டெல்லி எல்லைப்பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, மிக உயரமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

பல அமெரிக்க எம்பிக்கள் விவசாயிகளின் இயக்கத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர்.  குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ஹோலி ஸ்டீவன்ஸ், இந்தியாவில் விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடும்  விவசாயிகளின் மீது எடுத்துவரும் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது,  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என மோடிக்கு வேண்டுகோள் வைக்கிறேன், இந்தியாவில் என்ன நடக்கிறது என்ற நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார். மற்றொரு எம்பி இல்ஹான்  உமர் டெல்லியில் போராடும் விவசாயிகளின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்தியா தனது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தடையின்றி  இணைய சேவை அனுமதிக்க வேண்டும், அதேபோல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை விடுவிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். 

அதேபோல் துணை ஜனாதிபதி கமலா அரசின் மருமகள் மீனா ஹரிஷும் இந்தியாவின் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர், இன்ன பிற திரைப்படங்களும், விளையாட்டு துறையினரும், வெளிநாட்டு பிரபலங்களின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்  இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது, அதாவது, அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்கள், வளரும் ஜனநாயகத்தின் அடையாளமாக கருதுகிறோம், விவசாயத்தை மேம்படுத்த இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை ஜோ பிடன்  நிர்வாகம் ஆதரிக்கிறது. பொதுவாக இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் பிராந்தியத்தில் தனியார்த்துறை முதலீட்டை அதிகரிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அமைதியாக நடத்தப்படும் போராட்டம் என்பது ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும் என நாங்கள் நம்புகிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் இதையேதான் கூறியுள்ளது. இன்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவை தடையின்றி கிடைப்பது கருத்து சுதந்திரத்திற்கு அடிப்படையானது என அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. 
 

click me!