அதிமுகவில் சசிகலா...! ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர்கள்...!

By Ajmal KhanFirst Published Mar 5, 2022, 12:06 PM IST
Highlights

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என குரல் எழும்பியுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியின் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  இரட்டை தலைமையால் தான்  தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் ஒற்றை  தலைமை தான் அதிமுகவிற்கு  தேவை என ஒரு  தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தேனி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்ட அதிமுக சார்பாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி  இருந்தார். அதற்கு கடலூர் மாவட்ட செயலாளர் அருண் மொழி தேவன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜராம் உள்ளிட்டடோர்  எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதே போல பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும்  சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க தங்களது எதிர்ப்பை கூறி வருகின்றனர். 

இதனையடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், பெரியகருப்பண்  உள்ளிட்டவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுக தலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு  தங்களது ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில்  நேற்று   முன்னாள் உணவுத்துறை அமைச்சரும்,அதிமுக அமைப்புச் செயலாளருமான புத்திச்சந்திரன்,மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர்களிடம் கேட்டபோது, சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் அதிமுகவில் விரைவில் இணைக்கக் கோரி ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தியாகத் தெரிவித்தனர்.

ஓபிஸ்.ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது தொண்டர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரியாமல் தொண்டர்கள் இருந்து வருகின்றனர். எனவே கிணற்றில் போட்ட கல்லாக குழம்பி போய் உள்ள அதிமுகவில் எப்போது தெளிவு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.அதிமுவின் பொதுகுழு கூட்டத்தில் தான் சசிகாலவை கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கப்பட்டது. எனவே விரைவில் அதிமுக பொது குழு கூட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் சசிகலா இணைப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

click me!