சசிகலா சரத்குமார் திடீர் சந்திப்பு.. அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன அதிரடி விளக்கம்..

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 2:29 PM IST
Highlights

நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவின் அழைப்பு அமமுக தொண்டர்களுக்கு தான். அதிமுகவிற்கு பொருந்தாது என்றார். சரத்குமார் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். 

சசிகலாவின் அழைப்பு அமமுக தொண்டர்களுக்கு தான், அதிமுகவிற்கு பொருந்தாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை அவரது கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறந்து வைத்தனர். 

அதனோடு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஆகியவற்றையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தனர். ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங் களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருவரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் துப்புரவு பணியாளர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது குறித்து துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவின் அழைப்பு அமமுக தொண்டர்களுக்கு தான். அதிமுகவிற்கு பொருந்தாது என்றார். சரத்குமார் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்திருப்பார். சசிகலாவின் நடவடிக்கைகளால் இரட்டை இலைக்கு எந்த சிக்கலும் இல்லை", என்றார். 

click me!