பாதிக்கப்பட்ட மக்களை உடனே காப்பத்துங்க… ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த சசிகலா!!

Published : Nov 08, 2021, 12:07 PM IST
பாதிக்கப்பட்ட மக்களை உடனே காப்பத்துங்க… ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த சசிகலா!!

சுருக்கம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தேவையான நிவாரண உதவிகளை அளித்திட  தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த மழை மறுநாள் காலை வரை நீடித்தது. இதனால் சென்னை சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மீட்பு படையினர் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தேவையான நிவாரண உதவிகளை அளித்திட  தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில்‌ பெய்து வரும்‌ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற காலங்களில்‌ ஆட்சியாளர்கள்‌, அரசு அதிகாரிகளோடு ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்களையும்‌, ஏழை எளிய மக்களையும்‌ காத்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தற்போது கொரோனா அச்சம்‌ முற்றிலும்‌ விலகாத நிலையில்‌, வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும்‌ இடங்களில்‌ தகுந்த பாதுகாப்புடன்‌ சுகாதார வசதிகளையும்‌ செய்து தர வேண்டும்‌ என்று கூறிய சசிகலா, சென்னை மாநகராட்சி ஊழியர்கள்‌ பற்றாக்குறையைப்‌ போக்க பிற மாவட்டங்களில்‌ பணியில்‌ உள்ளவர்களையும்‌ இங்கு வரவழைத்து 24 மணி நேரமும்‌ தொடர்ந்து செயல்பட்டு விரைவில்‌ இயல்புநிலை திரும்ப வழி வகை செய்ய வேண்டும்‌ என்றும் மழை காலங்களில்‌ பொதுவாக பயணங்களை தவிருங்கள்‌ என்று சொல்லலாமே தவிர, வெளியூர்‌ சென்றவர்கள்‌ யாரும்‌ சென்னைக்கு திரும்பி வரவேண்டாம்‌ என்று ஆட்சியாளர்கள்‌ சொல்வது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளியூர்‌ சென்றவர்கள்‌ இங்கு உள்ள வீடு மற்றும்‌ அவர்களது உடமைகளை பாதுகாக்க உடனே திரும்பி வருவார்கள்‌. அவசர மருத்துவ தேவைகளுக்காகவும்‌ வருபவர்கள்‌ இருக்கிறார்கள்‌.

அவ்வாறு வருபவர்களுக்கும்‌, இந்த அரசு தேவையான பாதுகாப்பு அளித்து காப்பாற்ற வேண்டுமே தவிர மக்களை பாதுகாக்காமல்‌ இது போன்று வரவேண்டாம்‌ என கூறி கைவிரித்துவிட்டால்‌ என்ன செய்வது? சென்னை வாழ்‌ மக்கள்‌, வெள்ள பாதிப்புகளிலிருந்து இந்த அரசாங்கம்‌ தங்களை எப்படியும்‌ காப்பாற்றும்‌ என்ற நம்பிக்கையில்‌ இருக்கிறார்கள்‌, அவர்களை கைவிட்டுவிடாதீர்கள்‌ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2016 தேர்தலின்போது தன்‌ அக்கா புரட்சித்தலைவி‌ வெள்ளத்தால்‌ பாதிக்காத சென்னையை உருவாக்குவேன்‌ என்று வாக்குறுதி கொடுத்தார்கள் என்றும் அவர்களின்‌ இந்த கனவு விரைவில்‌ நனவாக வேண்டும்‌ என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்வதாகவும் கூறிய அவர், தமிழக அரசு, துரிதமாக செயல்பட்டு, மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டு தவிக்கும்‌ மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து உடனடியாக காப்பாற்றிட வேண்டும்‌ என்று மீண்டும்‌ வலியுறுத்‌தி கேட்டுக்கொள்வதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!
கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!