
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைகளுக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு அதிமுக வந்து சேர்ந்தது. அன்று முதல் இன்று வரை அக்கட்சியில் கோலோச்சி வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகாப்தம் இன்றுடன் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பின் சசிகலா அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
அந்த மாத இறுதியிலேயே சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்த டி.டி.வி.தினகரன் துணைப்பொதுச் செயலாளராக இருந்து கட்சியை நடத்தி வந்தார்.
ஆனால் சசிகலா, தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக இரண்டாக உடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன.
இதன் பிறகுதான் தொடங்கியது ஆட்டம். சசிகலாவையும், தினகரனையும் கட்சி மற்றும் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை எடப்பாடி தரப்பு தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக சென்னை மதுரவாயில் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 2140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 95 சதவீதம் பேர் கூட்டத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானமாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சசிகலா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
இதே போன்று அக்கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தது டி.டி.வி.தினகரனை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் எம்ஜிஆர் மறைந்த பிறகு கடும் நெருக்கடிகளுக்கிடையே அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதாவுடன் 37 ஆண்டுகளுக்கு மேலாக அதிகார மையமாக செயல்பட்டு வந்த சசிகலாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.