
‘தங்கத்தாரகையே வருக வருக வருக! இம்மண்ணின் தேவதையே வருக வருக வருக!’ _ அம்மா ஆன்தம் ஒலிக்க ஒலிக்க! அரியணையெங்கும் அம்மா நிறைந்திருக்க நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழுக்களை மறக்க முடியுமா?!
ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் கழக பொதுக்குழு நடக்கிறதென்றால் அ.தி.மு.க.வுக்கு அன்று தீபாவளிதான். பொதுக்குழு மற்றும் செயற்குழு அழைப்பு கிடைக்கப்பெற்றவர்கள் ஏதோ அம்மா கையால் கிரீடம் வைக்கப்பெற்றவர் போல் பெருமிதத்தோடு, நெட்டித் தள்ளும் கூட்டத்தில் கரைவேஷ்டி கசங்க கசங்க கலகலப்பாய் உள்ளே செல்வர்.
மேடைக்கு ஜெயலலிதா வந்ததும், அம்மா ஆன்தம் அள்ளும் பாருங்கள், சிலிர்த்துப் போய் எழுந்து நின்று கைகூப்புவார்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்.
தனது டிரேட் மார்க் புன்சிரிப்புடன் அந்த பெண் சிங்கம் அடிமேல் அடியெடுத்து வைத்து மேடையின் மையமாக வந்து இரட்டை இலையை சின்னத்தையும், பின் வணக்கத்தையும் வைக்கும்போது அமைச்சர்கள் பலருக்கு சப்த நாடியும் ஒடுங்கி கண்ணீர் முட்டிவிடும். முன்னள் அமைச்சர் வளர்மதியெல்லாம் அழுதேவிட்டிருக்கிறார்.
தான் இருக்கையில் அமரும் முன்பாக முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சசியை பார்த்து மென்மையாக சிரித்தபடி தலைவி அமர, நிர்வாகிகள் அமருவார்கள். அவைத்தலைவர் மதுசூதனன் தன் தழுதழுத்த குரலில் பொதுக்குழு நிகழ்வுகளை துவங்கிப் பேச...இங்கே மீடியாவில் ஜூரம் பற்றிக் கொள்ளும்.
ஜெ., தலைமையிலான பொதுக்குழு தீர்மாணங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல ஜம்முகாஷ்மீரத்து டீ கடை டி.வி.க்களில் கூட ஃபிளாஸ் ஆவதுதான் அரசியல் ஆச்சரியம்.
ஹூம்! அப்பேர்ப்பட்ட பெண் சிங்கம் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். போட்டோவுக்கு அருகில் மற்றொரு போட்டோவாகி சிரித்துக் கொண்டிருக்கிறது.
என்னதான் அதிகார வேட்கை பெரும் தீயாய் உள்ளே எரிந்து கொண்டிருந்தாலும் கூட இன்று பொதுக்குழுவில் கூடியிருக்கும் அத்தனை பேரும் ‘அம்மா’வை நிச்சயம் மிஸ் பண்ணுவார்கள்!