
அ.தி.மு.க.வை இன்று நிர்வகிப்பவர்கள் ஜெயலலிதா ஏற்படுத்தித் தந்த எந்த கட்டுப்பாடுகளை, கொள்கைகளை, சித்தாந்தங்களை கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ! ஒன்றை மட்டும் தெளிவாக கடைப்பிடிக்கிறார்கள். அது ‘சென்டிமெண்ட் பார்த்து அரசியல் செய்தல்’ என்பதுதான்.
ஜெயலலிதா இருக்கும் போது பல மாதங்களும், அவர் மறைவுக்குப் பின் சில நாட்களும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இயல்பிலேயே பக்த சிகாமணியான பன்னீர் மிகப்பெரிய அளவில் தனது ஆன்மீக செண்டிமெண்டுகளை வெளியே காண்பித்ததில்லை. கூடவே ஜெயலலிதா பயன்படுத்திய, முதல்வர் தகுதிக்கான பல விஷயங்களை நெருங்காமல் தவிர்த்தார்.
ஆனால் எடப்பாடியாரோ முதல்வரான பின் தன் ஸ்டைலையே மாற்றினார். ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வர் அறையை பயன்படுத்தினார், சென்னையிலிருந்து பக்கத்து மாவட்டத்துக்கு காரில் செல்லும் வழியில் ஜெ., வணங்கும் ‘வழி தெய்வங்கள்’ சிலவற்றை தவறாது வணங்கினார்.
அந்த ரூட்டில் இன்று பொதுக்குழுவையும் ஜெ., போல் சென்டிமெண்ட் டைம் பார்த்தே துவக்கியிருக்கிறார் எடப்பாடியார்.
இன்று கால 9 மணி முதல் 10:30 வரை எமகண்டம். ஆகவே 10:35 மணிக்கு பொதுக்குழு துவங்கியிருக்கிறது. பொதுக்குழு துவங்கும் நொடியில் அந்த பகுதியில் மழைச்சாரல் பொழிந்ததை எடப்பாடியார் நல்ல சகுனமாகவும், ‘அம்மாவே நம்மை வாழ்த்துகிறார்’ என்று தன் சகாக்களிடம் சொல்லியும் சிலிர்த்திருக்கிறார்.
இதையெல்லாம் கவனித்து சிரிக்கும் அ.தி.மு.க.வின் நடுநிலை சீனியர்கள்...நல்ல நேரம்! என்பது மக்கள் மற்றும் கழக தொண்டர்களின் அபிமானத்தை பெறும் நொடியில்தான் துவங்குகிறது என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ? என்று சொல்லி வெறுமையாய் சிரிக்கிறார்கள்.