
அ.தி.மு.க.வின் அடையாளமே ஜெயலலிதாவாகிப் போன பிறகு அந்த பெண் ஆளுமை இல்லாமல் அக்கட்சியில் நிகழும் முதல் பொதுக்குழு இது. இதை ‘பிரம்மாண்டம்’ என்று வர்ணிக்கிறது இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். கூட்டம். ஆனால் ‘பித்தலாட்டம்’ என்று விமர்சிக்கிறது தினகரன் கூட்டம். ஆனால் இரண்டுக்கும் நடுவில் சிக்கியிருக்கும் உண்மை தொண்டனோ கழக மாண்புக்கு வந்திருக்கும் ‘திண்டாட்டம்’ இது என்கிறான்...
இத்தனையையும் தாண்டி இதோ பொதுக்குழு புல்லட் ரயில் முதல் கியரை போட்டுவிட்டது!
அழைப்பிதழின் படி அ.தி.மு.க.வின் பொதுக்குழு 10:35_க்குதான் துவங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வழிகாட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டார், அவருக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்துவிட்டார். ஒன்பதரை மணியளவில் பொதுக்குழுவுக்குள் வந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டிருந்தது.
எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இணைந்த இரு தரபும் இந்த பொதுக்குழுவை ‘பிரம்மாண்டம்’ என்றுதான் வர்ணிக்கிறது. ஜெ., இருந்தால் நடக்கும் பொதுக்குழு போல் தோரணங்கள், கொடிகள், போக்குவரத்து நெரிசல் என்று கொஞ்சம் திமிலோகப்படுக்கிறது பொதுக்குழு நடக்கும் ஏரியா. பொதுக்குழுவை தடுக்க கடைசி நொடி வரை போராடி மண்ணைக்கவ்விய தினகரனின் தோல்வியையே இந்த பொதுக்குழுவின் பெரிய வெற்றியாக இருவரும் நினைக்கிறார்கள். ஒரு மாஸ் ஹீரோவின் படம் தியேட்டரை தொடும் முன் அதன் முக்கிய காட்சிகள் ரிலீஸ் ஆவது போல் ‘சசிகலா கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதோடு சசிகலாவும், தினகரனும் கட்சியிலிருந்தே நீக்கப்படுவதாக தீர்மான அறிவிப்புகள் வரப்போவதாக வாட்ஸ் ஆப் பற்றி எரிகிறது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்.
தினகரன் அணியோ இந்த பொதுக்குழுவை ‘பித்தலாட்டம்’ என்கிறது. கட்சியின் வழிகாட்டு விதிகளின் முக்கிய விஷயங்களை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழுவாகவே வர்ணிக்கிறது. என்னதான் தங்களின் தடை முயற்சி தோற்றுப் போயிருந்தாலும் கூட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மாணங்கள் நீதிமன்றத்தின் இறுது தீர்ப்புக்கு உட்பட்டது என்கிற கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு இருப்பதைக் காட்டி மிகுந்த மகிழ்ச்சியுமடைகிறார்கள். ‘என்னையும், கழக பொதுச்செயலாளர் சின்னம்மாவையும் அவர்கள் இன்று கட்சியிலிருந்தே தூக்கினாலும் கவலையில்லை. காரணம் இவர்களின் தீர்மாணங்கள் நீதிமன்றங்களை தூக்கி எறியும் வண்ணம் சட்ட ரீதியாக வெல்வோம்.” என்கிறார்.
ஆனால் அதே வேளையில் கழகத்தின் உண்மை தொண்டர்களோ, இது கழகத்தின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும், மாண்புக்கும் வந்த ‘திண்டாட்டம்’ என்கிறார்கள். ‘அம்மா இருக்கையில் நடக்கும் பொதுக்குழுவை தேசமே ஆச்சரியத்தோடு நோக்கும். ஆனால் அவர் இறப்புக்குப் பின் அதிகார போட்டியால் பிளவுபட்டு கடைசி நொடி வரை வாழ்வா! சாவா! எனுமளவுக்கு பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பதும், இதன் தீர்மாணங்கள் நீதிமன்றத்தினால் ரத்துசெயப்படவும் வாய்ப்பிருக்கிறது என்பதும் கழகத்தின் மாண்பிற்கு எந்த வகையிலும் அழகு சேர்க்கவில்லை.
இந்த பொதுக்குழு என்பது தனிமனித ஈகோ யுத்தமேயன்றி வேறேதுமில்லை.” என்று பொருமுகிறார்கள்.
இதையெல்லாம் ‘அ.தி.மு.க.வில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று கடந்து சென்றுவிட முடியவில்லை என்பதே யதார்த்தம்!