
சென்னை: ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் மீண்டும் என்ட்ரியாகும் வேலைகளில் சசிகலா இறங்கி இருப்பதாக வெளியான தகவல் ஓபிஎஸ், இபிஎஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
அதிமுகவில் தனிப்பெரும் தலைமையையும், தலைவியாகவும் இன்றளவும் போற்றப்படுவர் ஜெயலலிதா. அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் ரத்தத்தின் ரத்தங்களின் கோயில். இன்றளவும் ஜெயலலிதாவை தெய்வமாக அதிமுகவினர் வணங்கி வருவதும், அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை கோயிலாகவும் போற்றி வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவில்லமாக அறிவிக்கப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அப்போது இருந்த அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டு வேதா இல்லமும் அரசுடைமையாக்கப்பட்டது.
ஆனால் சட்டப்பூர்வ வாரிசான எங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து தீபா, தீபக் இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வெற்றி கிடைக்க வேதா இல்லத்தை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பில் வெற்றி கிட்டினாலும், வேதா இல்லத்தை அனுபவிப்பதில் சிக்கல் நிலவுவதுதான் அதிர்ச்சியான செய்தி. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008-2009ம் ஆண்டு வருமானவரி கண்க்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் தீபா, தீபக் இருவரையும் இணைக்க உத்தரவிட்டு உள்ளது.
தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் ஜெ. தரப்பு எவ்வளவு வரி தொகை செலுத்த வேண்டி இருக்கும்? மிக பெரிய தொகையாக இருந்தால், அதை செலுத்த முடியாமல் போனால் என்னாகும்? போன்ற கேள்விகள் திடுக்கென்று வந்து விழுகின்றனவாம். தொகை பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை கட்ட முடியுமா? அதற்கான வாய்ப்புகள் தீபா, தீபக் இருவரிடமும் உள்ளதா என்றால்… வாய்ப்பு இல்லை ராஜா என்றே கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இங்குதான் சசிகலாவின் மாஸ்டர் பிளான் தனி ட்ராக்கில் ஓடிக் கொண்டு இருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். பணம் கட்ட முடியாத சூழலுக்கு தீபா, தீபக் ஆகியோர் தள்ளப்பட்டால் அந்த தொகையை தாம் தந்துவிட தயார் என்று க்ரின் சிக்னல் சசிகலா தரப்பில் இருந்து பாஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அதற்கு உபகாரமாக வேதா இல்லத்தின் ஒரு பகுதியில் தாம் வசிக்க சம்மதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு ஜென்டில்மேன் அக்ரிமெண்டாக அணுகி இருக்கிறதாம். தாம் வசிக்கும் போது தீபா, தீபக்கும் அங்கேயே குடியிருக்கலாம், நோ அப்ஜெக்ஷன் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஆனால், தீபாவுக்கும், சசிகலாவுக்கும் தான் என்றைக்குமே ஆகாதே என்று கொக்கி போடுபவர்களுக்கும் பதில் வைக்கப்பட்டு உள்ளதாம். சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இப்பவும் தீபக் இருப்பதாகவும் அவர் மூலமாக அனைத்தும் சாத்தியமாக்கப்படும் என்றும் காதை கடிக்கின்றனர் நடப்பதை நன்கு அறிந்தவர்கள்.
தீபாவை ஒத்துக் கொள்ள வைக்கும் அஜெண்டாவையும் சசிகலா தரப்பில் இருந்து தீபக்கிற்கே தரப்பட்டு உள்ளதாம். கோர்ட் சொல்லும் தொகையை கட்ட முடியாது போனால் வேதா இல்லத்துக்கு மீண்டும் சிக்கல் என்ற மையப் புள்ளியை தீபாவிடம் எடுத்து சொல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம். வேதா இல்லத்தின் மீது இன்றளவும் மதிப்பு வைத்திருக்கும் தீபா இதற்கு ஒப்புக் கொள்வார், சசிகலாவும் போயஸ் கார்டனில் என்ட்ரியாகி விடுவார் என்று கூறுகின்றனர் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.
சசிகலா, வேதா இல்லம், தீபா… என்று உலவும் இந்த முக்கோண நடவடிக்கைகள் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கும் முக்கிய இடத்தில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாம். அனைத்தும் அறிந்து, அதிர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.