
மாரிதாஸ் கைது விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு பாடமாக அமையும் என்று மதுரை மாவட்ட பாஜக தலைவரும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் தீவிர வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தில், திமுக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை மதுரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாரிதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டபோதும், அவரை சிறையிலிருந்து விடுவிக்க முடியாத நிலை உள்ளது.
சென்னை போலீஸார், போர்ஜரி மின்னஞ்சல் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டிய வழக்கிலும் மாரிதாஸை கைது செய்துள்ளனர். எனவே, அந்த வழக்கில் இருந்தும் மாரிதாஸ் விடுவிக்கப்பட வேண்டும். என்றபோதும், ட்விட்டர் பதிவால் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து மாரிதாஸ் விடுதலை ஆகியிருப்பது பாஜகவினர், இந்து அமைப்பினருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் மாரிதாஸை கைது செய்தபோது நேரில் வந்து எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாவட்டச் செயலாளரும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது திமுக அரசு பொய் வழக்கைப் பதிவு செய்தது. அவரை கைது செய்தபோதே போலீஸார் அத்துமீறி அழைத்துச் சென்றார்கள். திட்டமிட்டு திமுக அரசு மாரிதாஸை கைது செய்து புனையப்பட்ட பொய் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பில் யூடியூபர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தீர்ப்பு திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோதே அராஜகம் நடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வந்துவிட்டது.
மாரிதாஸ் கைது தகவல் கேள்விபட்டவுடனே, பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவின் பெயரில் மாரிதாஸுக்கு ஆதரவாக நின்றோம். உயர் நீதிமன்ற வழக்கின் இந்தத் தீர்ப்பானது அனைத்து யூடியூபர்களுக்கும் இந்த வெற்றி சேரும். எங்கள் மீதான பொய் வழக்குகளைச் சட்ட ரீதியாக சந்திப்போம். யாரும் பாஜகவுக்கு எதிராகக்கூட கருத்து சொல்லட்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம்” என்று சரவணன் தெரிவித்தார்.