பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா... ஆட்சிக்கு- இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... அதிமுகவை ஒன்றிணைக்கும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Sep 23, 2020, 12:37 PM IST
Highlights

இந்த இணைப்பு உறுதியானால் சசிகலா வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பே பெங்களூரு சிறையில் இருந்து ரிலீசாவார் என்பதும் உறுதியாகி இருக்கிறது. 
 

மே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தமாக வி.கே.சசிகலா தலைமையிலான அமமுகவை அதிமுகவில் இணைக்க பாஜக தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இணைப்பு உறுதியானால் சசிகலா வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பே பெங்களூரு சிறையில் இருந்து ரிலீசாவார் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

 

இரு தினங்களுக்கு முன் தனது நண்பர் மல்லிகார்ஜூன், உதவியாளர் ஜனாவுடன் டெல்லி சென்ற டி.டி.வி.தினகரன், பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

வரும் சட்டமன்றத்தேர்தல் அதிமுகவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா என்கிற ஆளுமை இல்லாமல் அதிமுக சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. 2016 டிசம்பரில் அவரது மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதில் பாஜகவின் பங்கு முக்கியம்.  ஜெயலலிதாவின் தோழியான சசிகலா முதல்வர் பதவியை கைப்பற்ற நினைத்ததால் ஓ.பிஎஸ் தியானம் இருந்து எதிர்ப்பை தெரிவித்து வெளியேறினார். சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி கே பழனிசாமியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. அடுத்து சசிகலா குடும்பத்தை தவிர்த்து விட்டு ஓ.பி.எஸ்- எடப்பாடி ஒன்றிணைந்து ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இப்போது அவர்களுக்குள்ளும் அதிகார போட்டி நிலவி வருகிறது. 

ஜனவரி 2021 க்கு முன்னர் சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கோண மோதலால் அதிமுக வெற்றி கேள்விக்குறியாகியுள நிலையில், திமுகவை சமாளிக்க வேண்டுமானால் இந்த மூவரையும் ஒரே கோட்டில் இணைத்து பயணிக்க வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என கணக்குபோட்டு பாஜக அவர்களை இணைந்து செயல்பட அறிவுறுத்தி வருகிறது.

தினகரனுடனான இந்த பேச்சுவார்த்தைகள் பலனளித்தால் சசிகலாவை விரைவில் விடுவிப்பதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இணைப்பு ஒப்புக்கொண்ட தினகரன், சசிகலாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி அளிக்க வேண்டும். அவரை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும். எடப்பாடி-ஓ.பி.எஸ் ஆட்சியை வழி நடத்தட்டும். சசிகலா கட்சியை வழி நடத்தட்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பாஜக மூத்த நிர்வாகிகள் மையமாக தலையசைத்து க்ரீன் சிக்னல் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஒருவரிடம் பேசுகையில், ’அமமுக- அதிமுக இணைவதை கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் முதல் விரும்புகிறார்கள். இந்த இணைப்புக்கு பாஜக  தலைமை கடந்த ஓராண்டுகளாவே வலியுறுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கட்சியில்  வலுவான தலைவர் இல்லை என்பதை பாஜக உணர்ந்தே அதிமுகவை பிரிப்பதும் , இணைப்பதுமாக தனது கைக்குள் வைத்திருக்கிறது.  சசிகலா இந்த வாய்ப்பை ஏற்றால் சிறையில் இருந்து வெளியேறுவதில் எந்தவிதமான தடைகளும் இருக்காது. இது சசிகலாவுக்கு கிடைத்த வாய்ப்பாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ல்லை என்பதை உறுதிப்படுத்த சசிகலா முகாம் இந்த வாய்ப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். எடப்பாடிக்கும் சசிகலா உதவியுடன் ஆட்சியை தக்க ஒரு வாய்ப்பாக அமையும்.  அனைவருக்கும் இதில் ஆர்வம் இருப்பதால், இந்த இணைப்பு செயல்பட வாய்ப்புள்ளது, ”என அவர் கூறினார்.

 திமுகவை எதிர்த்து அதிமுக வெற்றிபெற  ஒன்றிணைந்து போராட வேண்டும். சசிகலா சிறையில் இருந்ததால் அவரை ஒதுக்கி வைக்க முடியாது என பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். பிப்ரவரி 2017 இல், ஜெயலலிதா பிரதான குற்றவாளியாக இருந்த, ஒரு முறையற்ற சொத்து வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் இருப்பதாக அதிமுக மற்றும் பாஜகவும் சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் இப்போது ஒன்றிணைவதால் அது இப்போது பெரும் பிரச்னையாக இருக்காது. அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் நிச்சயம் அமமுகவுடன் ஒன்றிய வேண்டும். டி.டி.வி.தினகரனும் அதனை நிருப்பித்துள்ளார்.  ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வேட்பாளர், வலுவான எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர் ஆகியோரை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாநிலம் முழுவதும் தொடர்ந்து கூட்டத்தை கூட்டி படை திரட்டினார்.

 

அமமுக பொருளாளரும், சசிகலா விசுவாசியுமான பி வெற்றிவேல், "கட்சித் தலைமை மீண்டும் பாதுகாப்பானவர்களிடம் திரும்ப வேண்டும். அப்போதுதான் இந்த  இணைப்பு சாத்தியமாகும். அதிமுக முற்றிலும் உடைந்துவிட்டது. அதனை சசிகலா  மற்றும் டி.டி.வி.தினகரன் போன்ற தலைவர்களால் மட்டுமே கட்சியை மீட்டெடுக்க முடியும்.  இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமல் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாது. எங்களுக்கு எதிரி பா.ஜ.க அல்ல. திமுக மட்டும்தான் எங்கள் நிரந்தர எதிரி. தற்போதுள்ள அதிமுக தலைமை நிச்சயம் தோல்வியை தழுவும். அங்கே இப்போதைய நிலையில் முதல்வர் வேட்பாளராக தகுதியுடைய நபர் ஒருவரும் இல்லை ‘’ எனக்கூறினார். 

click me!