இந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகள்..?? நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்த பாஜக எம்.பிக்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2020, 12:33 PM IST
Highlights

நாட்டின் பாதுகாப்புக்காக ரஃபேல் போர் விமானங்கள், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, நவீன ரக டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் இந்திய ராணுவம் வாங்கி குவித்து வரும் நிலையில்

இந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகளை புகுத்த வேண்டும் என பாஜக எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இவ்வாறு அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
அவர்களின் இந்த கேள்வி மிகக் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த எம்பிக்கள் குன்பர்  புஷ்பேந்தர் சிங் சந்தல் மற்றும் மாலா ராஜலட்சுமி ஷா ஆகியோர் மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினார். அதில் இந்திய பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேதகாலத்தில் செய்யப்பட்ட போர் முறைகளை கொண்டுவர திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டுள்ளனர். அவர்களின் இந்த கேள்வி அவையில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


 
நாட்டின் பாதுகாப்புக்காக ரஃபேல் போர் விமானங்கள், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, நவீன ரக டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் இந்திய ராணுவம் வாங்கி குவித்து வரும் நிலையில் வேதகால போர்முறைகள் என்று பாஜகவினர் பேசியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு மத்திய பாஜக அரசும் மிகுந்த பொறுப்புணர்வுடன், அப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை என பதில் அளித்துள்ளது. பாஜக எம்பி களின் இக்கேள்விக்கு பல அரசியல் கட்சியினரும் விமர்சகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதாவது வேத கால போர் முறைகள் என்றால், குதிரை பூட்டிய தேரில் சென்று வில், வாள், கதாயுதம், வஜ்ராயுதம் மூலம் சண்டை போட சொல்கிறார்களா? அப்போது இருந்ததாகக் கூறப்படும் வஜ்ராயுதம், பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்களை பயன்படுத்த சொல்கிறார்களா? அபிமன்யுவை  சிக்கவைக்க மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட சக்கர வியூகத்தை பிரயோகிக்க வேண்டும் என்கிறார்களா? மந்திரங்கள் மூலம் ஏவல் செய்து எதிரிகளை சித்தபிரமை அடைய செய்வதையோ அல்லது எதிரிகள் மீது முனிவர்கள் போல சாபம் விட சொல்கிறார்களா?  பாஜக எம்பிக்கள் எதைச் சொல்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது போன்று நேரத்தை வீணடிக்கும் கேள்விகளை நாடாளுமன்றம் எப்படி அனுமதிக்கிறது என்றும் விமர்சித்து வருகின்றனர். 
 

click me!