முதல்வர் வேட்பாளர் சசிகலா! சிக்கலை தீர்த்த சிக்கிம் தீர்ப்பு : டெல்லி வழிகாட்டலில் அ.தி.மு.க.வின் அலேக் பிளான்!

By Vishnu PriyaFirst Published Oct 4, 2019, 4:48 PM IST
Highlights

சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து, அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளவும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடவுமே டெல்லி லாபி தயார் என்கிறார்கள். ஆனால் நான்காண்டு சிறை தண்டனை பெற்றவர் எப்படி தேர்தலில் நிற்க முடியும்? என்று ஒரு கேள்வி எழலாம். அதற்கும் பக்கா விடை வைத்துள்ளது டெல்லி லாபி. அதுதான் சிக்கிம் ரூட்!

ஜெயலலிதாவின் பூத உடல் ராஜாஜி ஹாலின் முன்னே வைக்கப்பட்டிருந்த நேரம். பாரத பிரதமர் மோடி, இறுதி அஞ்சலிக்காக அங்கே வந்தார். வந்தவர், சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொல்லிச் சென்றார். அடுத்த சில வாரங்களில் ஜெயலலிதா டீம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டீல் தீர்ப்பு வந்தது. சசி, இளவரசி மற்றும் சுதாகரன் மூவரும் சிறை சென்றனர். அப்போது ’சசி தலையில் மோடி கை வைத்ததன் சூட்சமம் இதுதானா! டெல்லி லாபி தன் வேலையை காட்டிவிட்டது!’ என்று கிண்டலடித்தனர் அரசியல் விமர்சகர்கள்.

இன்றும் அதே விமர்சகர்கள் அதே டெல்லி லாபி - சசி இருவரையும் வைத்து பேச துவங்கியுள்ளனர் பரபரப்பாக. ஆனால் இது சசிகலாவுக்கு மிகப் பெரிய பூஸ்டிங்கான விஷயம். அதாவது சிக்கிம் மாநிலத்தில் வெளியான ஒரு தீர்ப்பை மையமாக வைத்து சசிகலாவை அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வைக்க திட்டம் தீட்டிவிட்டது டெல்லி லாபி! என்கிறார்கள்.  இது பற்றி அவர்கள் மேலும் விரிவாக பேசியபோது “அ.தி.மு.க. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கிறது  பாரதிய ஜனதா. அதேவேளையில் எடப்பாடியார் மற்றும் பன்னீர் இருவரையும் அ.தி.மு.க.வின் முகங்களாக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது! என்பதை ஒரு சர்வேயின் அடிப்படையில் புரிந்து கொண்டுள்ளனர். 

எனவே, சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து, அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளவும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடவுமே டெல்லி லாபி தயார் என்கிறார்கள். ஆனால் நான்காண்டு சிறை தண்டனை பெற்றவர் எப்படி தேர்தலில் நிற்க முடியும்? என்று ஒரு கேள்வி எழலாம். அதற்கும் பக்கா விடை வைத்துள்ளது டெல்லி லாபி. அதுதான் சிக்கிம் ரூட்! அதாவது தற்போது சிக்கிம் மாநில முதல்வராக இருக்கும் பிரேம்சிங் தமாங், முன்பு கால்நடைத்துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கின் தீர்ப்பின் படி ஒரு வருடம் சிறையிலிருந்தார். 

இந்த நிலையில் சமீபத்திய பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட முடியவில்லை. ஆனால் அவரது கட்சி வென்றது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமாங்கை முதல்வராக அழைத்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் கோரிக்கை வைத்தனர். அனுமதி கிடைத்ததால் அவர் முதல்வரானார். ஆனால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு அவர் வென்றாக வேண்டுமே! அதேவேளையில் அவர் பெற்ற சிறை தண்டனையின் படி   ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாதே! எனவே தனக்கு விதிக்கப்பட்ட அந்த ‘இத்தனை ஆண்டுகள் போட்டியிடக்கூடாது’ எனும் தண்டனையை குறைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் கோரினார். பா.ஜ. மேலிடமும் இதற்கு அனுமதி தந்தது. தேர்தல் ஆணையமும் உடனடியாக அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து, தடைக்காலத்தை குறைத்தது. எனவே இப்போது தாராளமாக தமாங் போட்டியிடலாம் தேர்தலில், ஜெயித்து முதல்வராகவும் தொடரலாம்.

இந்த ரூட்டைத்தான் சசிகலா விஷயத்தில் அப்ளை பண்ணிட முடிவு செய்திருக்கிறது பாரதிய ஜனதா. மேலும் ‘நன்னடத்தை’ முறையில், தண்டனைக்காலம் முடியும் முன்னே சசி சிறை மீள்வார் எனும் தகவல் ஒன்றும் ஓடிக் கொண்டுள்ளது. எனவே சசி வெளியே வந்ததும், அவரை அ.தி.மு.க.வில் முன்னிலைப்படுத்தி, தேர்தலில் ‘முதல்வர் வேட்பாளராக’ ஆக்கி, கொண்டு சென்றுவிட டெல்லி லாபி முடிவு செய்துள்ளது. தற்போதைய அ.தி.மு.க.வினர் இதையெல்லாம் விரும்பாவிட்டாலும், ஏற்றே ஆக வேண்டும் எனும் நிலை.” என்கிறார்கள். 

சிக்கிம், மேகாலயா, பூட்டான் என்று லாட்டரி சீட்டு மாதிரி டெல்லி லாபி என்ன வேணா பிளான் பண்ணலாம். ஆனால் மக்கள் ஏற்றாக வேண்டுமே?

click me!