அதிமுக பொதுச்செயலாளரென உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை கிடையாது.. நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி.!

By Asianet TamilFirst Published Oct 23, 2021, 8:38 PM IST
Highlights

அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்துள்ளது.
 

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக தினகரன் ஆகியோரை தேர்ந்தெடுத்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை எதிர்த்து சசிகலா, தினகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே வழக்கு விசாரணை இடையே தான் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டி.டி.வி. தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா மட்டும் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், ‘இந்த வழக்கை தொடர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும் டெல்லி ஐகோர்ட்டும் உத்தரவிட்டது” என்று வாதிட்டார்.
மேலும், ‘அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. கட்சியும் சின்னமும் தங்களிடம்தான் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் அதனை உறுதி செய்துள்ளது. சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று ஓபிஎஸ்-ஈபிஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நீண்ட நிலையில், வழக்கு விசாரணையை அக்டோபர் 27-க்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

click me!