ஓபிஎஸும்- ஈபிஎஸும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்...சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது... ஜெயக்குமார் மீண்டும் அதிரடி!

By Thiraviaraj RMFirst Published Dec 20, 2021, 1:19 PM IST
Highlights

ஓ.பி.எஸ் சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கும் பொருந்தும். சசிகலாவுக்கு பொருந்தாது. 

தவறு செய்தவர்கள் திருந்தினால் பெரிய மனதோடு ஏற்பது மனித இயல்பு. ஆனால் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் சசிகலா. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சசிகலா பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்ததைத் தொடர்ந்து, சசிகலா தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அப்போது தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் எக்ஸ் பேக்டராக இருப்பார் எனப் பல அரசியல் 

இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத நிலையில், வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அதிர வைத்தார். அதிமுக தலைமை அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே, சசிகலா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. சசிகலாவின் இந்த முடிவு தேர்தல் களத்தில் டி.டி.வி.தினகரனுக்கு பாதகமாக அமைந்தது.

திமுகவுக்கு எதிரான அணியில் குழப்பம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக சசிகலா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அதிமுகவால் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. அதிமுக கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து தேர்தல் முடிந்து சில மாதங்கள் அரசியல் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, அதன் பிறகு அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு தனது அரசியல் அத்தியாயத்தை மீண்டும் தொடங்கினார்.

அதேபோல அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை இரட்டை இலை கொடி பொருத்தப்பட்ட காரில் சென்று சந்தித்தார். மதுசூதனன் மறைவுக்கும் கூட இரட்டை இலை கொடி பொருத்தப்பட்ட காரிலேயே சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் என்றும் சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். இது அதிமுக வட்டாரத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதற்கிடையே விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதிமுக படுதோல்வி அடைந்தது.

இதனால் மிக விரைவில் மீண்டும் சசிகலா கட்டுப்பாட்டில் அதிமுக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அன்று மீண்டும் இரட்டை இலை பொருத்தப்பட்ட காரில் சென்று அஞ்சலி செலுத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரைப் பயன்படுத்தி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து ஜெயகுமார் கூறுகையில், ‘’ஓ.பி.எஸ் சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கும் பொருந்தும். சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சசிகலா அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு நிலைப்பாட்டோடு தெளிவாக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

click me!