
திருமதி சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன் என பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என ச சிகலா கூறியிருப்பதை முழுமனதோடு வரவேற்பதாக கூறியுள்ளார்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை அவர் கைப்பற்ற போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டே விலக போவதாக அவர் அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி எண்ணத்திற்கிணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
நம்முடைய பொது எதிரியை, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி என் எண்ணத்தை செயல்படுத்தி சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. என உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவரது இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், சசிகலாவின் முடிவை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
திருமதி சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். திருமதி சசிகலா அவர்கள் சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.