ஒதுங்கியிருந்தால்தான் ஒற்றுமையாக இருப்பீர்கள் என்பதால் ஒதுங்கிவிட்டார். அரைமணிநேரம் போராடினேன், TTV உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 10:41 PM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், அவர் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.  

சசிகலாவின் அறிக்கை எனக்கே அதிர்ச்சியையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் எனவும் டிடிவி கூறியுள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக  சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை அவர் கைப்பற்ற போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டே விலக போவதாக அவர் அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி எண்ணத்திற்கிணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். 

நம்முடைய பொது எதிரியை, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.  என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். 

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி என் எண்ணத்தை செயல்படுத்தி சகோதரியாக இருந்தேனோ  அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களும், தமிழக  மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார். அமமுக தேர்தலில் போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில், சசிகலாவின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், அவர் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது. சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன் ஆனால் பலனில்லை. அதிமுகவில் இணைந்து இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்பதால் விலகிவிட்டார், தான் ஒதுங்கி இருந்தால்தான் ஒற்றுமையாக இருப்பீர்கள் எனக் கூறிய அவர் ஒதுங்கி விட்டார். ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சசிகலா முடிவு செய்துவிட்டார். நான் இதுவரை எப்போதுமே இணைய வேண்டும் என்று கூறியதில்லை. வரும்  10ம் தேதி அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.  

 

click me!