
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியையும், ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்ட சசிகலா, முதல் கட்டமாக பொது செயலாளராக ஆனார்.
அடுத்து முதல்வர் பதவியை நெருங்கும்போது, அவருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தார் பன்னீர். அதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா.
அதனால், தமது விசுவாசியான எடப்பாடியை முதல்வர் ஆக்கிவிட்டு, தமது அக்காள் மகன் தினகரனை கட்சியின் துணை பொது செயலாளராக நியமித்து விட்டு சென்றார் சசிகலா.
அதன் பின்னர், கட்சியை தமது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தினகரன், ஆர்.கே. நகரில் வேட்பாளராக களமிறங்கியதில் சிக்கல் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடை பெற்று வருகிறது.
அத்துடன், சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்ப உறவுகள் அனைவரையும் அரசியலை விட்டு ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்துள்ளனர்.
எனினும், கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், உள்ளூர அவரது ஆதரவாளர்களின் ஆதிக்கம் இன்னும் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அதனால், சசிகலா குடும்ப உறவுகள் நீக்கம் என்பது தினகரன் நடத்தும் நாடகம் என்று பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனும், தினகரனின் மைத்துனருமான டாக்டர் வெங்கடேஷை அரசியலுக்கு வந்து தலைமை ஏற்குமாறு, சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தற்போதுள்ள நிலையில், டாக்டர் அரசியலுக்கு வந்தால், மாமா தினகரன் வழியில் அவரும் உள்ளே போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, தயவு செய்து கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஆதரவாளர்களிடம் தினகரன் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்த டெல்லி போலீசார், அவரது மனைவி அனுராதாவிடம் தனியாக விசாரணை நடத்தியதில், அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள், டாக்டர் வெங்கடேஷையும் சிக்கலில் இழுத்துவிட முயற்சி நடக்கிறது என்றும், அதன் விளைவாகவே, அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.