சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு- சசிகலா கண்டனம்
சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சசிகலா, விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாயும், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலை 350.50 ரூபாயும் உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதன் மூலம் சென்னையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் புதிய விலை சிலிண்டருக்கு 1,118.50 ரூபாயாகவும், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர் ஒன்று 2,268 ரூபாயாகவும் விற்கப்பட உள்ளது.
ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு.?
ஏற்கனவே, பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவிக்கின்ற ஏழை எளிய சாமானிய மக்களுக்கு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்தியிருப்பது கூடுதல் சுமையாக அமைந்துவிடும். மேலும் கொரோனா பாதிப்புக்குப்பின் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரநிலை தட்டுத்தடுமாறி, சீராகி வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் பெரும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும். அதேபோன்று ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும். ஒரு வருடத்திற்கு ஒரு வீட்டிற்கு மானிய விலையில் 12 சிலிண்டரை பெற முடியும், கூடுதலாக வாங்க வேண்டும் என்றால் மானியம் இல்லாமல் கூடுதல் தொகைக்கு வாங்க முடியும் என்ற நடைமுறை இருந்துவந்த நிலையில்,
விலை உயர்வை திரும்ப பெறுக
மத்திய அரசின் PAHAL திட்டத்தின் படி மானிய தொகை உரிய நபரின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் தங்களுக்கு மானிய தொகை தங்களது வங்கி கணக்கில் வருவதில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.எனவே, ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இதில் உடனே தலையிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தினை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மானிய தொகை பெறுவதில் இருக்கும் சிக்கல்களையும் சரிசெய்து உரியவர்களுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களுக்கு எளிதில் கிடைப்பதற்கான வழிவகைகளை செய்திட வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்... மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!