திருச்சி,தர்மபுரியில் சசிகலா பேனர் கிழிப்பு : மாயமாய் போன தீபா போஸ்டர்கள்...!!

First Published Dec 18, 2016, 2:26 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், ஜெயலலிதா பொறுப்பு வகித்த பொதுச் செயலாளர் பதவி இதுவரை காலியாவே உள்ளது.

இதைதொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என அதிமுக அமைச்சரகள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை வி.கே.சசிகலாவிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

இதற்கிடையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலாபுஷ்பா உள்பட பலர் வி.கே.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

மேலும், அதிமுகவில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் என பலர் வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் குதிப்பதாக சில தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஆனால், அதுபற்றி அவர் அறிவித்ததாக எதுவும் தெரியவில்லை.

இதனால், ஏராளமான தொண்டர்கள், தீபாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரது படம் பதித்த போஸ்டர்களை பல்வேறு பகுதிகளில் ஒட்டி வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுகவின் ஒரு தரப்பினர், தீபா படம் உள்ள போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

இதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போஸ்டர்கள், பேனர்கள், கட்அவுட்கள் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதில், வி.கே.சசிகலாவின் படமும் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பேனர் மற்றும் கட்அவுட்களில் உள்ள வி.கே.சசிகலாவின் படத்தை, அதிமுக தொண்டர்கள் கிழித்து வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர், ஆர்.கே. நகர் தொகுதியான தண்டையார்பேட்டை, மதுரை, திருச்சி, கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வி.கே.சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அதிமுகவில் இரு தரப்பினரும் மோதி கொள்வது வி.கே.சசிகலா மற்றும் தீபா ஆகியோருக்காக. இவர்கள் இருவருமே இதுவரை அதிமுக பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டும் என எந்த தொலைக்காட்சியிலும் பேட்டி அளிக்கவில்லை. அதுபற்றி பேசவும் இல்லை. இதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!