சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டி... சட்ட ரீதியாக தீவிர ஆலோசனை... டிடிவி.தினகரன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Feb 15, 2021, 3:22 PM IST
Highlights

பிரதமர் மோடி தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அமமுகவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் மா.சேகர். இவரின் மகள் சுருதிக்கும், டாக்டர் முருகேசனுக்கும் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி.தினகரன்  தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தார். 

பின்னர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பிரதமர் மோடி தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதனால், அவர் தமிழகத்துக்கு வருவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அதிமுகவினர் பேசும் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அம்மாவின் தொண்டர்கள்  அமமுகவில்தான் இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும்தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை. டி.டி.வி.தினகரன் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது. எங்களது இலக்கு என்பது அம்மாவுடைய ஆட்சியைக் கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதுதான்.

நம்ம ஊரில் ஊற்றிக் கொடுப்பது என்ன குலத் தொழிலா? யாரோ உளறுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கொள்ளையர்கள் அடுத்தவர்களைக் கொள்ளையர்கள் என்றுதான் கூறுவார்கள். ஊற்றிக் கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊற்றிக் கொடுப்பவர் என்றுதான் சொல்வார்கள். இனிமேல் நான் அடிமையாக இருக்க மாட்டேன் எனக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஏற்கெனவே அடிமையாக இருந்திருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். சேற்றிலே கல்லைப் போட்டு தனக்குத்தானே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலம் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தருவார்கள். அ.ம.மு.க-வின் எதிர்காலம் என்பது பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகின்றன. சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ அது கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படியே நடக்கிறது.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனையை சசிகலா அனுபவித்துள்ளார் இதனால் சசிகலாவால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் சிக்கிமில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தமாங் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் ஆணையம். இதனை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பும் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக  அமமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

click me!