அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கு.. ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 10:24 AM IST
Highlights

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதன்பின், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, சசிகலா சிறையில் இருந்தபோது, 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில்  நடைபெற்றது. அதில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும்  தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின்  பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.  

இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது. சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவிற்கு சசிகலா பதிலளிக்கவும் கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் நீதிபதி விடுப்பின் காரணமாக வழக்கு விசாரணை ஜூன் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

click me!