வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துங்க... திரும்பத் திரும்ப தேர்தல் ஆணையத்தை அணுகும் திமுக..!

By Asianet TamilFirst Published Apr 23, 2021, 10:04 PM IST
Highlights

தபால் வாக்குகள் மூன்று மணி நேரம் எண்ணிய பிறகே வாக்கு இயந்திரத்தில் (இ.வி.எம்.) பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்ததாக திமுக வழக்கறிஞர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

வாக்கு எண்ணும் மையங்களில் கண்டெய்னர்கள் வருவது, கணினி நிபுணர்கள் வருவது  பற்றி திமுகவினர் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களையும் புகார்களையும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக வக்கீல்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் பச்சையப்பன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்போடு நடக்க வேண்டும். எந்த முறைகேடுகளுக்கும் சந்தேகத்திற்கும் இடம் கொடுக்ககூடாது. எனவே, முழுமையான பாதுகாப்புடன் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை நேர்மையாகவும் நியாயமாகவும் எந்த தவறுகளுக்கும் இடம் இல்லாமல் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். மேலும் 14 மேஜைகளிலும் தனித்தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தெளிவாக வாக்குகளை கட்சி முகவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இதில் எந்த குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று இருந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பழைய முறையிலேயே வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று கூறினோம்.
அதற்கு தேர்தல் ஆணையரும் தபால் வாக்குகள் மூன்று மணி நேரம் எண்ணிய பிறகே வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார். சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியாளர் ஒருவர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்துள்ளார். எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

click me!