
ஜெயலலிதா, சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஆனால் ஜெயலலிதா தரப்பில் சொத்துக்குவிப்பு வதுக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தவிட்டார்.
இதனையடுத்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அறிவித்தது,
இந்நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஓபிஎஸ் , சசிகலா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை சட்டமன்ற குழுத் தலைவராக கடந்த வாரம் தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க தயாராக இருந்தபோது தான் ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார்.
இந்த இக்கட்டான நிலையில் தான் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு என அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்புதான் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மீண்டும் இழுத்துக்கொண்டே செல்கிறது. நாளை மறுநாள் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,தீர்ப்பு வழங்கும் நீதிபதி அமித்வராய் வரும் திங்கட்கிழமை விடுமுறை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து வரும் செவ்வாய் கிழமை அதாவது 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தெரியும் சசிகலாவின் எதிர்காலம் குறித்து?