அதெல்லாம் முடியவே முடியாது... சசிகலா எதிராக அதிரடி காட்டும் வருமான வரித்துறை..!

By vinoth kumarFirst Published Aug 26, 2021, 1:55 PM IST
Highlights

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதால் எனவே அவருக்கு அபராதத்தைக் கைவிடும் சுற்றறிக்கை, இவருக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்தார். 

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமானவரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலா கடந்த 1994 - 95ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1994 - 95ம் ஆண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவிற்கு 2002ம் ஆண்டு வருமானவரித் துறை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதால் தனக்கு எதிரான வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு வருமானவரித் துறை தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை சசிகலா வழக்கிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதால் எனவே அவருக்கு அபராதத்தைக் கைவிடும் சுற்றறிக்கை, இவருக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்தார். ஆனால், சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த பொருந்தும் என வாதிட்டார். இதையடுத்து இது தொடர்பாக சசிகலா தரப்பில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 8ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

click me!