BREAKING: அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கியது செல்லும்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! குஷியில் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Dec 5, 2023, 11:02 AM IST

சசிகலா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 


அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. 

Latest Videos

undefined

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அப்போது இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம் சசிகலா வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது சசிகலா தரப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம், சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாதிட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். 

ஓபிஎஸ் தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்திருந்த நிலையில் நேற்று கனமழை காரணமாக பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சசிகலா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

click me!