உள் வெள்ளப் பெருக்கு தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை முதலமைச்சர் அவர்கள் தற்போது காட்ட ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை. 4,000 கோடி ரூபாய் அளவுக்கு மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், சென்னை மாநகர் மழைநீரில் மூழ்கி இருக்கிறது என்றால், சரியான திட்டமிடல் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
சென்னையில் பெய்த கனமழையால் எந்தெந்த சாலைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளதோ, அந்தந்த சாலைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர்வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஒளிவு மறைவற்ற, திறமைமிக்க மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பது தான் ஒரு நல்ல அரசின் இலக்கணமாகும். அந்த வகையில், இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் மிகுந்த அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் செயல்பட வேண்டும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
undefined
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை பெய்ததையடுத்து, சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னைவாழ் மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாயினர். சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் முறையாக இல்லாததுதான் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியதற்கு காரணம் என்று கூறி, சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு ஒன்றை தி.மு.க. அரசு அமைத்தது. இந்தக் குழு, தனது இடைக்கால அறிக்கையை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் 728 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதன் தொடர்ச்சியாக மேற்படி குழு தனது இறுதி அறிக்கையை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, “சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம். தூர்வாருதல், புதிதாக 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீரில் மிதப்பதன்மூலம் தெளிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபத்தூர், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கே.கே. நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், கொளத்தூர் என சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன.
மாங்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் பல்லவன் சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. ஒரு பகுதி கூட தண்ணீருக்கு தப்பவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால், யாரும் சென்று பார்த்ததாக தகவல் இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களோ எல்லாம் நன்றாக இருப்பதாக பேட்டி அளிக்கிறார். ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக உள்ளது. உள் வெள்ளப் பெருக்கு தொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை முதலமைச்சர் அவர்கள் தற்போது காட்ட ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை. 4,000 கோடி ரூபாய் அளவுக்கு மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், சென்னை மாநகர் மழைநீரில் மூழ்கி இருக்கிறது என்றால், சரியான திட்டமிடல் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதில் பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். விழலுக்கு இறைத்த நீர் போல, மக்களின் வரிப் பணம் விரயமாக்கப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து கள ஆய்வு நடத்தி, மக்களுக்குத் தேவையான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், எந்தெந்த சாலைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளதோ, அந்தந்த சாலைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற துயரங்களுக்கு மக்கள் ஆளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.