+2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் ஆனால்... தமிழக முதல்வருக்கு சரத்குமார் வைத்த அதிரடி கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2021, 6:59 PM IST
Highlights

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக +2 பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நடந்த சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கூட +2ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டுமென பெரும்பாலான கட்சி பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில்  பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன்.

தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதே அளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்.  ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்த வாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்த வேண்டும்.

ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்து செல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறு சிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்த மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 
 

click me!