பழங்குடியின பெண்கள் இருவர் மீது பாலியல் தாக்குதல் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் தலைகுனிவான சம்பவம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குகி மற்றும் மைதேயி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குகி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் மேதேயி மக்களையும் பழங்குடியிட பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மாநிலம் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் முதல் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்ற குழுவினர் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று மைதேயி இன மக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் மணிப்பூர் முழுவதும் பரவி பிரச்சனையை அதிகப்படுத்தியது.
பெண்களுக்கு பாலியல் கொடுமை
பல இடங்களிலும் உயிர் பலியும், வீடுகளை தீயிட்டு எரிக்கும் சம்பவமும் அதிகரித்தது. இந்தநிலையில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வீடியோ மூலம் நேற்று வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என குரல் எழுந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் உயிர் மற்றும் தன்மானத்தை துச்சமாக கருதி அவமதிக்கும் இது போன்ற இழிநிலை சம்பவங்களை இனியும் வேடிக்கை பார்க்க கூடாது.
தேசத்திற்கு தலைகுணிவு
பெண்களை கூட்டு பாலியல் செய்த சம்பவ இடத்தில் கூடி இருந்த அனைவரும் பாரபட்ச மின்றி குற்றவாளியாக கருதப்பட்டு, இனி இது போன்ற சம்பவத்தில் ஈடுபடாத வகையில் உச்சபட்ச தண்டனை விதித்திட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர் போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மணிப்பூர் கொடூரங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பு.! இனியும் ஆட்சியில் தொடர அருகதையில்லை- சிபிஎம்