
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பாமக ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக பாமக பொருளாளர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்: உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் சென்னை அம்பத்தூரில் திங்கள் முதல் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், 4 தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பாமக சார்பில் ஆதரவு தெரிவித்தேன்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியால் பணி மறுக்கப்பட்ட 1953 தூய்மைப் பணியாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அம்பத்தூரில் 4 பேருக்கு மட்டும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகிய நான்கு பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தேன்.தேர்தல் வருகின்ற நேரத்தில் மட்டும் அப்பா மற்றும் அண்ணன் வேடமிடும் முதலமைச்சர் ஸ்டாலின் எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டேன். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் திமுக அரசு தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத்தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினேன்.