தமிழ்நாட்டில் காவிக் கிருமிகள்.. முதலமைச்சரே அலர்டா இருங்க.. அலறும் வீரமணி.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2021, 2:00 PM IST
Highlights

அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த செயல் என்ற பெயரில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஊடுருவுவதன்மூலமே அவர்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது! ‘‘புதிய கல்வி கொள்கை’’ என்ற பெயரில் கூறப்படும் கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ‘தேசிய கல்விக் கொள்கை’ கூறுவதே, ஆர்.எஸ்.எஸ்., காவி அமைப்புகள் மெல்ல மெல்ல ஊடுருவுவதற்கல்லாமல் வேறு என்ன?

அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களைக் கற்பிக்கும் சாக்கில் தமிழ்நாட்டில் காவிக் கிருமிகள் கல்வித் துறையில் நுழைய வகுக்கும் வியூகத்தை முறியடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘திராவிட மாடல்’ என்று புகழப்படும் திராவிடர் ஆட்சியில் கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அண்ணா, கலைஞர் ஆட்சியிலும் சாதித்தவைதான் பெருமைக்குரியவை.மகத்தான பொறுப்பு முதலமைச்சருடையது சமச்சீர் கல்வித் திட்டம் போன்றவையும், சத்துணவில் முட்டை அல்லது வாழைப் பழம் போன்றவற்றால் பள்ளிப் பிள்ளைகள் பெற்ற பலன்கள் ஏராளம்.

இந்நிலையில், தற்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, சரித்திரம் படைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில், அதிகம் நிதி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறையை மிகுந்த கவனத்துடன் நடத்திடவேண்டிய மகத்தான பொறுப்பு முதலமைச்சருடையது ஆகும். 

தனியே கல்விக் கொள்கை என்ற அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்தோம்!

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஒன்றிய அரசு திணிக்கும் பழைய குலக்கல்வித் திட்டம் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து, சனாதனத்தைப் பாடமாக்கி, மாணவர்கள் மனதில் காவிச் சாயமேற்றும் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்பதால்தான், ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி அதிகாரத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி - மாநில உரிமைகளைக் காப்பற்றிடும் வகையில் பட்ஜெட்டில் தனியே கல்விக் கொள்கை - நிபுணர்களை வைத்து உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்து - மகிழ்ச்சி அடைந்தோம்.ஏராளமான எதிர்பார்ப்புகள் பலதரப்புகளிலும் உள்ளன.

பள்ளிக் கல்வித் துறையின் ஆணை!
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து வந்துள்ள ஓர் அறிவிப்பு நமக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் - கொள்கை ரீதியாக ஏற்படுத்தியுள்ளதை முதலமைச்சரின் மேலான கவனத்திற்குக் கொண்டு செல்வதும், முன்வைப்பதும் நமது முக்கிய கடமையாகும்! பள்ளிக் கல்வித் துறையின் ஓர் ஆணை, முடிவு பற்றியது அது! அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குத் தொண்டு நிறுவனம்மூலம் இணைய வழியில் பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அனுப்பியுள்ள - கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

அகஸ்தியா என்ற பன்னாட்டு அறக்கட்டளை என்ற அமைப்பு தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாட்டில் - சென்னை, திருச்சி, மதுரை உள்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டும் இத்திட்டங்களை அந்த நிறுவனம் (அகஸ்தியா) தொடர அனுமதி கோரி, 18 மாவட்டங்களில் புதிதாக அறிவியல் மய்யம் அமைக்கவும், அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களைக் கற்பிக்கும் சாக்கில், உள்ளே ஒட்டகம் நுழைவதுபோல, இது அனுமதிக்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது! சென்ற இருண்ட அ.தி.மு.க. ஆட்சியில் நுழைந்த ஒரு நிறுவனத்திற்கு, புதிதாக அமைந்த தி.மு.க. ஆட்சியில் அகலமாகக் கதவுகளைத் திறப்பது மிகப்பெரிய ஆபத்தல்லவா! சர்க்கரைப் பூசிய விஷ உருண்டை - உள்ளே செல்வதை அனுமதிக்கலாமா?

ஆர்.எஸ்.எஸ்., காவி அமைப்புகள் மெல்ல மெல்ல ஊடுருவுவதற்கல்லாமல் வேறு என்ன?
அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த செயல் என்ற பெயரில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஊடுருவுவதன்மூலமே அவர்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது! ‘‘புதிய கல்வி கொள்கை’’ என்ற பெயரில் கூறப்படும் கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ‘தேசிய கல்விக் கொள்கை’ கூறுவதே, ஆர்.எஸ்.எஸ்., காவி அமைப்புகள் மெல்ல மெல்ல ஊடுருவுவதற்கல்லாமல் வேறு என்ன? இதை எதிர்த்து தனி கல்விக் கொள்கை வகுக்கவிருக்கும் தி.மு.க. ஆட்சியில், இதனை அனுமதிப்பது மிகப்பெரிய தொல்லையை - ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்!

இந்த நிறுவனத்தின் தலைவர் ராம்கி ராகவன் என்ற பார்ப்பனர் புதியக் கல்விக் கொள்கை - ஒன்றியக் கல்விக் குழு உறுப்பினர் என்பதிலிருந்தே, அவரது நிறுவனம் எப்படிப்பட்டது என்பது எளிதில் திராவிட உணர்வாளர்களால் புரிந்து கொள்ளப்படும்.பிரதமரின் தேசிய அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டவர் அவர்.

‘அகத்தியன் விட்ட புதுக்கரடி!’
இவரை பள்ளிக் கல்வியை மேம்படுத்த அரசின் நிதியைக் கொட்டிக் கொடுத்து, அழைத்தால் - அது ‘அகத்தியன் விட்ட புதுக்கரடி’ என்று புரட்சிக்கவிஞர் கூறியதை நினைவூட்டும்! உடனடியாக முதலமைச்சர் இதில் தலையிட்டு, இந்த ஏற்பாட்டினை ரத்து செய்யவேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிள்ளைகளுக்கு மட்டுமாம்! 

பள்ளிப் பிள்ளைகளில் அதென்ன ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பிள்ளைகளுக்கு மட்டும்‘ என்ற பொருளாதார அளவுகோல்? இதிலிருந்தே புரியவில்லையா? இணைய வழி படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை முன்னேற்றிட, நல்லாசிரியர்களுக்கும், கணினி வழி நிபுணர்களுக்கும் தமிழ்நாட்டில் பஞ்சமா?எனவே, முதலமைச்சர் அவர்கள் இதில் தாமதிக்காமல் - இதனை ரத்து செய்து, தமிழ்நாட்டில் காவிக் கிருமிகள் கல்வித் துறையில் நுழைய வகுக்கும் வியூகத்தை முறியடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மறுபரிசீலனை அவசரம், அவசியம்!
மறுபரிசீலனை உடனடியாக தேவை! இப்படிப்பட்ட ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இது ‘விஷ விருட்சமாக’ வளர்ந்துவிடும் என்று வேதனையுடன் கூறுகிறோம், எச்சரிக்கிறோம்!
 

click me!