
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு பேருந்துகள் , அரசு கட்டடங்களுக்கு காவிநிறம் பூசி வரும் நிலையில் தற்போது காவி நிறம் பூசப்படுவதில் கழிப்பிடங்களும் சேர்ந்துகொண்டுள்ளன.
உ.பி.யில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்றதை தொடர்ந்து, பல்வேறு அரசு கட்டடங்களையும் பேருந்துகளையும் காவி நிறமாக்கும் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் அரசு பேருந்துகளுக்கு காவி நிறத்தை பூச உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பேருந்துகளுக்கு காவிநிறம் அடிக்கப்பட்டது.
ஹஜ் இல்லத்திற்கு காவி
பின்னர், முஸ்லிம் மக்கள் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக , அவர்கள் அனுமதிபெற அணுக வேண்டிய லக்னோவில் உள்ள ஹஜ் பயண இல்லத்தின் கட்டடத்திற்கும் உ.பி. அரசு காவி நிறம் அடித்து திருப்தி அடைந்தது.
புனித ஹஜ் பயணம் செல்லவிரும்பும் முஸ்லிம்கள் இந்த அரசு அலுவலகத்தில் தான் அனுமதி பெற வேண்டும்.
காவி நிறம் இந்து மதத்தை, குறிப்பாக பா.ஜ.க. மற்றும் இந்துத்துவா அமைப்புக்களை பிரதிபலிக்கும் நிறமாக கருதப்படுவதால் ,முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் இந்த காவிமய நடவடிக்கைக்கு முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கழிப்பிடங்களும் காவிமயம்
தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள கழிப்பிடங்களுக்கும் காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. எட்டாவாவில் உள்ள கிராம பஞ்சாயத்தில் உள்ள அமிர்த்பூர் கிராமத்தில் கழிப்பிடங்களுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட வீட்டு கழிப்பிடங்களுக்கு காவி நிறம் அடித்துள்ளனர். இந்த கழிப்பிடங்கள் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவி நிறம் பூசுவோம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாயத்து தலைவர் வேத் பால் கூறியதாவது- இந்த கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 350 கழிப்பிடங்களில் 100 கழிப்பிடங்களுக்கு காவி நிறம்அடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கழிப்பிடங்களுக்கும் விரைவில் காவி நிறம் பூசப்படும். இது யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரிலும் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.