
பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி, ஆலோசிப்பதற்காக கடந்த 13 மாதங்களாக பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டும் எனக்கு கிடைக்கவில்லை. இனி மக்களிடம் சென்று எனது கருத்துக்களைத் தெரிவிப்பேன் என்று பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
போர்க்கொடி
பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்தும், மோடி அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் பேசி வருகிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறைவுக்கு ரூபாய் நோட்டு தடை என கடுமையாகச் சாடி இருந்தார். நிதி அமைச்சர் ஜெட்லி, மோடியின் தவறான செயல்பாடுகளால் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
பேட்டி
இந்நிலையில், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. -
கிடைக்கவில்லை
நான் பல்வேறு விஷயங்கள் பேசுவதற்காகவும், ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் மோடியைச் சந்திக்க 13 மாதங்களாக நேரம் கேட்டு காத்திருந்தேன். ஆனால், எனக்கு இப்போது வரை அனுமதி கிடைக்கவில்லை.
மக்களைச் சந்திப்பேன்
இனி அரசு தரப்பில் யாரையும் சந்திக்கமாட்டேன் என நான் முடிவு செய்துவிட்டேன். இனி நான் என்ன கருத்துக்களைக் கூற நினைக்கிறேனோ, அதை வெளிப்படையாக மக்கள் மத்தியில் கூறப்போகிறேன்.
மாறிவிட்டது
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி காலத்தில் இருந்தது போன்று பா.ஜனதா கட்சி இன்று இல்லை.
அனுமதியின்றி பார்க்க முடியும்
அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், பா.ஜனதாவைச் சேர்ந்த அடிப்படை உறுப்பினர், தொண்டர் ஒருவர் டெல்லிக்கு சென்று, கட்சியின் தலைவர் அத்வானியை எந்தவிதமானமுன்அனுமதி இன்றி சந்திக்க முடியும். அந்த நிலை அப்போது இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை.
ஆச்சர்யமில்லை
ஆனால், இப்போது, மூத்த தலைவர்கள், முக்கிய தலைவர்கள் கூட கட்சித் தலைவரைச் சந்திக்க முன் அனுமதி ெபற முடியவில்லை. ஆதலால், பிரதமர் மோடியைச் சந்திக்க 13 மாதங்கள் காத்திருந்தும் அனுமதி கிடைக்காத விஷயத்தை நினைத்து நான் வியப்படையப் போவதில்லை.
மதிப்பு இல்லை
பா.ஜனதா கட்சியில் இப்போது எல்.கே. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை யாருக்கும் மதிப்பு தருவதில்லை. இதோ இந்த புகைப்படத்தைப் பாருங்கள், பிரதமர் மோடிக்கு , கட்சியின் தலைவர் அமித் ஷா ‘லட்டு’ ஊட்டுகிறார். அருகில் ராஜ்நாத் சிங், அனந்த குமார், சுஷ்மா சுவராஜ்உள்ளிட்ட பலர் தெரியும் வகையில் நிற்கிறார்கள்.
சாதாரண தொண்டர்
ஆனால், மூத்த தலைவர் அத்வானியை பின்புறம் கூட காணவில்லை. இப்போது அவர் கட்சியில் ‘முக்கியத் தலைவர்’ என்ற நிலையில் இருந்து இறக்கப்பட்டு ‘முக்கியமில்லா, சாதாரண தொண்டராக’ பார்க்கப்படுகிறார்.
எதிர்த்த திட்டங்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடக்கும்போது அவர்கள் கொண்டு வந்த எந்தெந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்ததோ அதே திட்டங்களை பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றுகிறது.
உதாரணமாக, பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசம், வேளாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சமீபத்தில் விருது பெற்றது, அந்த மாநில அரசு முக்கியத்துவம் இல்லாத விவரங்களைத்தான் கொடுத்து இருக்கிறார்கள். என் வாழ்வில் அவர்களுடன் இதுபோல்ஏராளமாக நான் ஏராளமாக விளையாடி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.