தமிழக கோவில்களை விடுவிக்க அடுத்து அமையும் அரசுடன் இணைந்து செயல்படுவோம்..! வாக்களித்த பிறகு சத்குரு பேட்டி

By Asianet Tamil  |  First Published Apr 6, 2021, 5:13 PM IST

அரசாட்சியை வன்முறை மற்றும் ரத்தம் சிந்தாமல் மாற்றிக் கொள்கின்ற நடைமுறை தான் தேர்தல், இதில் மக்கள் அனைவரும் சாதி, மதம், கட்சி பார்க்காமல் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் இன்று (06-04- 2021) நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சத்குரு அவர்கள் வாக்களித்தார்.

Latest Videos

வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சத்குரு அவர்கள் கூறியதாவது.

தேர்தல் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல, நம் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தன்மை ஆகும். ஏனென்றால் அரசாட்சிகள் எந்த கலவரமும், போராட்டமும் இல்லாமல் மாற்றிக் கொள்கின்ற ஒரு முறை தான் தேர்தல். இதற்கு முன்பு நம்முடைய மனிதகுல வரலாற்றில் பார்த்தால், முதலில் எங்கும் இப்படி நடைபெறவில்லை. ஆட்சியும், அரசும் மாற வேண்டுமென்றால் பல வெட்டு நடக்கும், அனால் இப்பொழுது நாம் ஓட்டு மூலம் இதனை செய்கிறோம். ஆதலால் இது மிகவும் முக்கியமானது.

மேலும் வாக்குரிமை என்பது ஒரு தனி மனிதனுக்கு தரப்பட்டுள்ள மகத்தான மரியாதை ஆகும். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் தான் உள்ளது, அதனால் இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதை அனைவரும் பொறுப்பாக கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நாம் வாக்களிக்கும் போது நம் சாதி, மதம், கட்சி எது என்று பார்க்க வேண்டாம், யார் நம் மாநிலத்திற்கு முன்னேற்றம் கொண்டு வருவார்கள், வெற்றிகரமாக தமிழ்நாட்டினை நடத்திச் செல்வார்கள் மற்றும் மக்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, நீங்கள் அவருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறினார். 

மேலும் கோவில் அடிமை நிறுத்து இயக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சத்குரு, இது ஒரு வெற்றிகரமான இயக்கமாக நடந்து வருகிறது, தோரயமாக 3.5 கோடி மக்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். இப்பொழுது இந்த இயக்கத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரளவிற்கு இது குறித்து பேசி இருக்கிறார்கள், முக்கியமான இரண்டு கட்சிகள் சில படிகள் எடுத்து இருகிறார்கள். கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு தேவையான பணம் கொடுக்கிறோம், தேவையானதை செய்கிறோம் என்று சொல்லி இருகிறார்கள். இது எல்லாம் சரி, ஆனால் அரசு செய்தால் என்ன செய்ய முடியும்? கட்டிடங்கள் மட்டும் தான் சரி செய்ய முடியும். மேலும் இது அரசு ஊழியர்களை வைத்து செய்கின்ற வேலை அல்ல.

கோவில்கள் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் அதற்காக நெஞ்சில் இருந்து பக்தியுணர்வு பொங்கி வரும் பக்தர்கள் கரங்களில் தான் இருக்க வேண்டும். அடுத்து எந்த கட்சி அரசாங்கத்திற்கு வந்தாலும், நாம் அவர்களுடன் வேலை செய்து அடுத்த ஐந்து வருடத்தில் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நோக்கத்தில் இருக்கின்றோம் என்று கூறினார்.
 

click me!