உதயநிதியை ஓரம் கட்டும் சபரீசன்..? இறுதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2021, 12:10 PM IST
Highlights

இரு தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டும், அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தில் நடக்கும் உச்சக்கட்ட மோதல் பற்றித்தான் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  ’இந்த பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தேர்தல் நேரத்தில் எதிர்மறையான ரிசல்ட் கிடைக்கக் கூடும்’ என கலங்குகின்றனர்.

திமுகவை பொறுத்தவரை கருணாநிதி காலத்திலிருந்தே பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு வந்தன. ஸ்டாலின் தலைவரான பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது. இதில் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும், மருமகன் சபரீசனுக்கும் இடையில் எதிர்பாராத மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டும், அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இது பற்றி திமுக முன்னணி பிரமுகர் ஒருவர் கூறுகையில், ’’ஸ்டாலின் குடும்பத்தில் ஆரம்பம் முதல் அதிகார மையமாக சபரீசன்தான் செயல்பட்டு வருகிறார். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி வெளிப்படையாக எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது. ஆனால் அத்தனை அதிகாரங்களும் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். கடந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தல்களில் பலருக்கும் இவர்தான் சீட் வாங்கித் தந்தார். இதில் பல கோடி பயனடைந்ததாக திமுகவினரே சொல்கின்றனர். முன்பு சுனிலுடனும், தற்போது பிரசாந்த் கிஷோருடனும் இணைந்து ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சிகளை வடிவமைப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

ஆரம்பக்கட்டத்தில் உதயநிதி சினிமாவில் கவனம் செலுத்தியதால் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் என்றைக்கு அவர் இளைஞரணி செயலாளராக மகுடம் சூட்டப்பட்டாரோ அன்று முதல் இருவருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமானது. உதயநிதியின் வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு அவருக்கு நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, மாநில அளவிலான பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு, திருச்சி தெற்கு மாவட்டத்தில் கட்டிப் போட்டதில் சபரீசனுக்கு முக்கிய பங்கு உண்டு. இதேபோல உதயநிதி ஆதரவாளர்கள் பலரையும் சைலண்டாக ஒரம்கட்டினார்.

இது பற்றி தந்தை ஸ்டாலினிடம் உதயநிதி முறையிட்டும் பலனில்லை. வரும் தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தது 25 சதவீத இடங்களையாவது பெற்றுத்தர வேண்டும் என்கிற முடிவோடு உதயநிதி காய்நகர்த்தி வந்தார். தனது எதிர்கால அரசியலுக்கு துணையாக இருக்கும் என்கிற எண்ணத்தில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதை தெரிந்துகொண்ட சபரீசனோ ஐபேக் மூலம் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். செய்தியறிந்து உதயநிதி கடும் டென்ஷன் ஆகி விட்டார். ’அதிகாரம் இல்லாத பொறுப்பில் இருக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் அவரையே பார்த்துக்கச் சொல்லுங்க’என ஆவேசப்பட்டிருக்கிறார். இந்த சமயத்தில்தான் உதயநிதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என செய்தி பரவியது. இதன் பின்னணியிலும் சபரீசன் இருப்பாரோ என்கிற சந்தேகம் உதயா தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் மருமகன் சபரீசன் பக்கம் நின்ற துர்கா ஸ்டாலின் இப்போது மகன் உதயநிதி பக்கம் சாய்ந்துவிட்டார். ஸ்டாலினோ இறுதலைக்கொள்ளி எறும்பு போல தவித்து வருகிறார். விஷயம் தெரிந்தாலும் பெரிய இடத்து விவகாரம் என்பதால் திமுக சீனியர்கள் அமைதி காக்கின்றனர். அறையில் நடக்கும் இந்த மோதல் அம்பலத்திற்கு வருவதற்குள்ளாக விரைவில் தீர்வுகாண்பது நல்லது’’ என அவர் கூறினார். 

click me!