ஆதரவாளர்களுக்கு சீட்... அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?... திடீர் ஆலோசனையால் பரபரப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 11:57 AM IST
Highlights

இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் தேமுதிகவை தவிர பிற கட்சிகளுடான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல்,நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நேர்காணலை நடத்தி முடித்து சாதனை படைத்தனர்.


தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5ம் தேதி 6 வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி ஆகியோர் போட்டியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுடைய ஆதரவாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து இருவரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் கலந்துகொள்ளவிருந்தனர். 

ஆனால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே தலைமை தாங்கினார். அதே சமயத்தில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.  
 

click me!